இணையம் வாயிலான துன்புறுத்தல்களுக்குத் தீர்வுகாண்பதை நோக்கமாகக் கொண்ட இணையப் பாதுகாப்பு ஆணையம் சிங்கப்பூரில் கடந்த ஜூன் 29ஆம் தேதி தனது செயல்பாடுகளைத் தொடங்கியுள்ளது.
உள்ளடக்கங்களை நீக்குவதைக் கட்டாயமாக்கவும் தவறு செய்பவர்களைத் தங்கள் சார்பாகப் பொறுப்பேற்கச் செய்யவும் ஏதுவான ஒரு தனித்துவ அமைப்பு அது.
இணையத் தொல்லைகளால் அவதிப்பட்டு வருபவர்களுக்கு அந்த அமைப்பு நிம்மதி அளிப்பதாகப் பாதிக்கப்பட்டவர்கள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினர்.
அவர்களில் ரெனே செங் என்னும் 31 வயதுப் பெண்ணும் ஒருவர்.
சமூக ஊடகங்களில் உள்ளடக்கத்தை உருவாக்குபவரான அவர், கடந்த ஈராண்டுகளாக டிக்டாக்கில் ஓர் அந்நியரால் தொல்லைகளை அனுபவித்து வருகிறார்.
தம்மை முத்தமிடுவது, தவறாகத் தொடுவது போன்று செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி அந்த அந்நியர் உருவாக்கிய காணொளிகளால் தாம் அவதிப்பட்டு வருவதாக அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.
மணமாகி 11 மாதக் குழந்தையுடன் இருக்கும் செங், அந்தக் காணொளிகளை நீக்க டிக்டாக்கிடம் முறையிட்டும் பயனில்லை என்கிறார்.
அதனால், காணொளிகளைக் கண்டு தமது உறவினர்கள் குழப்பமடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அந்த ஆபாசக் காணொளிகள் போலியானவை என்று கூறியும் உறவினர்களில் சிலர் அதனை ஏற்க மறுப்பது வருத்தமளிப்பதாகவும் அவர் கூறினார்.
அதனால், பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண புதிய அமைப்பான இணையப் பாதுகாப்பு ஆணையத்தைத் தாம் நாட இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார் அந்தப் பெண்.
இணையம் வாயிலாக விளைவிக்கப்படும் தீங்குகள் குறித்து சமூக ஊடகத் தளங்களிடமிருந்து போதுமான, தாமதமான அல்லது பயனில்லாத பதில்களை எதிர்கொள்பவர்களுக்கு இந்த ஆணையம் ஒரு மாற்று வழியை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


