‘எஸ்ஜி கலாசாரச் சிறப்புத்தொகை’ திட்டத்தில் மேலும் 1,100க்கும் அதிகமான உள்ளூர் நூல்கள்

‘எஸ்ஜி கலாசாரச் சிறப்புத்தொகை’ திட்டத்தில் மேலும் 1,100க்கும் அதிகமான உள்ளூர் நூல்கள்

2 mins read
868431ba-ac71-43d6-872e-f714516f5bbe
கின்னகுனியா புத்தகக் கடையில் எஸ்ஜி கலாசாரச் சிறப்புத்தொகை அதிகாரபூர்வ ஒட்டுவில்லையுடன் கூடிய நூல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வாசிப்பு ஆர்வமுள்ளோர் மேலும் 1,100க்கும் மேற்பட்ட உள்ளூர் படைப்புகளை எஸ்ஜி கலாசாரச் சிறப்புத்தொகையைப் பயன்படுத்தி வாங்கலாம் என்று கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சு செவ்வாய்க்கிழமை (மே 19) அறிவித்துள்ளது

இதன் மூலம், எஸ்ஜி கலாசாரச் சிறப்புத்தொகைத் திட்டத்தில், 15 புத்தகக் கடைகளில் 2,600க்கும் மேற்பட்ட சிங்கப்பூர் இலக்கிய நூல்களை வாங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் புதிதாக பஷீர் கிராபிக் புக்ஸ், புக் பாயிண்ட், லெட்டர்ட் வித் புக்ஸ் உள்ளிட்ட மேலும் 6 கடைகள் இணைக்கப்பட்டுள்ளன.  

‘எஸ்ஜி கலாசாரச் சிறப்புத்தொகை’ எனும் அதிகாரபூர்வ ஒட்டுவில்லையைக் கொண்டு இத்திட்டத்தில் இடம்பெறும் நூல்களை அடையாளம் காணலாம். 

தகுதி பெறும் நூல்கள் கடைக்கு கடை மாறலாம் என்று அமைச்சு குறிப்பிட்டது.

திட்டத்திற்கான இலக்கியப் படைப்பு சார்ந்த பட்டியலில், சிங்கப்பூர்க் குடிமக்கள் அல்லது நிரந்தரவாசிகள் எழுதிய தமிழ், ஆங்கில, சீன, மலாய் மொழிப் புனைகதைகள், கவிதைகள், நாடகங்கள், இலக்கியக் கட்டுரைகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

நூல்கள் கிடைக்கும் இடங்களை https://sgculturepass.gov.sg என்ற இணையப்பக்கத்தில் பார்க்கலாம்.

இத்திட்டத்தில் பங்கேற்க விரும்பும் உள்ளூர் எழுத்தாளர்கள், தங்களது வெளியீட்டாளர்கள் அல்லது விநியோகிப்பாளர்கள் மூலம் partners.sgculturepass.gov.sg என்ற இணையப்பக்கத்தில் விண்ணப்பிக்கலாம்.

உள்ளூர்க் கலை, மரபுடைமை நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்க 18 வயதை எட்டிய சிங்கப்பூரர்கள் அனைவருக்கும் $100 மதிப்பிலான கலாசாரச் சிறப்புத்தொகைத் திட்டம் 2025, செப்டம்பரில் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 3 மில்லியன் சிங்கப்பூரர்களுக்காக மொத்தம் $300 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 1ஆம் தேதி நிலவரப்படி, புத்தகக் கடைகளில் கிட்டத்தட்ட $539,000 பயன்படுத்தப்பட்டுள்ளது. உள்ளூர் இலக்கியங்களை ஊக்குவிக்க இத்திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படும் என அமைச்சு கூறியுள்ளது.

குறிப்புச் சொற்கள்