எஸ்ஜி60 சமூக நிதி திரட்டு, ‘எம்3அட்டவுன்ஸ்’ அமைப்புடன் இணைந்து பிப்ரவரி 24ஆம் தேதி முதல் ஏப்ரல் 26ஆம் தேதிவரை காஸா பகுதிவாழ் மக்களுக்கு உதவியாக $2.4 மில்லியன் திரட்டியுள்ளன.
இந்த நிதி காஸாவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உணவு, சுத்தமான நீர், மருத்துவப் பொருள்கள், சுகாதாரப் பராமரிப்பு, கல்வி ஆகியவற்றுக்குப் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது நிதி ரஹ்மத்தான் லில் அலாமின் அறநிறுவனம்., யுனிசெஃப் எனப்படும் ஐநா சிறுவர்கள் நிதியம், எகிப்திய செம்பிறை அமைப்பு ஆகியவற்றுடன் உள்ளூர் பங்காளித்துவ அமைப்பான ‘ஹியுமேனிட்டி மேட்டர்ஸ்’ ஆகியவை இணைந்து திரட்டியது.
‘எம்3அட்டவுன்ஸ்’ என்ற அமைப்பு உள்ளூரில் மலாய், முஸ்லிம் தொண்டூழியர்கள், நிபுணர்கள் ஆகியோரைக் கொண்ட சமூக அடித்தளங்களை உள்ளடக்கியது. இவை கல்வி, சமுதாயத் தேவைகளை எதிர்நோக்கும் மக்களுக்கு உதவி புரியும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ளன.
இதன் தொடர்பில் யுனிசெஃப் அமைப்பின் பெயரில் $1மில்லியன் பெறுமானமுள்ள மாதிரி காசோலை சிங்கப்பூர் இஸ்லாமிய நடுவத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 27) வழங்கப்பட்டது. எனினும், திரட்டப்பட்ட முழுத் தொகையும் யுனிசெஃப் அமைப்பிடம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய முஸ்லிம் விவகாரங்களுக்கான அமைச்சர் ஃபைஷால் இப்ராகிம், “இப்பொழுது வழங்கப்படும் காசோலை நிதியுதவி மட்டுமல்ல. காஸா பகுதி மக்களின் துயரத்தை துடைக்க ஆழமான ஆர்வத்துடன் செயல்படும் மானிடத்தை பிரதிபலிக்கிறது,” என்று விளக்கினார்.
இதுபற்றிக் கருத்துரைத்த ரஹ்மத்தான் லில் அலாமின் அறநிறுவனம் இந்த நிதி சிங்கப்பூரர்களின் தொடர் தாராள மனப்பான்மையை வெளிக்காட்டுவதாகக் கூறியது. அதில் தான் மட்டற்ற மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்தது.
காஸா பகுதி மக்களுக்கு நன்கொடை வழங்கியவர்களில் ஒரு மருத்துவமனை, உணவு மற்றும், வீடு புதுப்பிப்பு, பயண வர்த்தகங்கள் ஆகியவற்றுடன் கோயில்கள், தனிப்பட்ட நன்கொடையாளர்கள் ஆகியோர் அடங்குவர்.