இணையவழி ஊழியர்கள் சட்டத்தின்கீழ் 8,000க்கும் மேற்பட்ட இணையவழி ஊழியர்கள் அதிக மத்திய சேமநிதிப் (மசே நிதி) பங்களிப்பைத் தேர்வு செய்துள்ளனர்.
இச்சட்டம் 2025 ஜனவரி 1 முதல் முழுமையாக நடைமுறைக்கு வரும்.
1995 ஜனவரி முதல் தேதிக்கு முன்னர் பிறந்த டாக்சி, தனியார் வாடகை வாகன ஓட்டுநர்கள், பகுதி நேர விநியோக ஊழியர்கள் 2024 நவம்பர் 1 முதல் மசேநிதி இணையத்தளம் வழி அதிக பங்களிப்பு விகிதத்தைத் தேர்வு செய்யலாம். இந்த ஏற்பாடு நடப்புக்கு வந்த ஒன்றரை மாத காலத்துக்குப்பின் இந்தப் புள்ளிவிவரங்களை மனிதவள அமைச்சு செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 17) வெளியிட்டது.
நாடாளுமன்றத்தில் செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட இணையவழி ஊழியர்கள் சட்டத்தின் கீழ், 1995 ஜனவரி 1 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்த இணையவழி இளைய ஊழியர்கள் தங்கள் மசே நிதிக் கணக்குக்கு அதிகம் பங்களிப்பது கட்டாயம்.
இணையவழி வணிகத்தள நிறுவனங்களும் தங்கள் பங்கைச் செலுத்த வேண்டும்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில், இணையவழி ஊழியர்களுக்கான மசே நிதிப் பங்களிப்பு விகிதம் ஆண்டுக்கு 2.5 விழுக்காடு வரை அதிகரிக்கும். இணையவழி வணிகத்தள நிறுவனங்களுக்கான விகிதங்கள் ஆண்டுக்கு 3.5 விழுக்காடு வரை உயரும்.
காலப்போக்கில், ஊழியர்களும் முதலாளிகளும் அப்பொழுது வழங்கப்படும் சம்பளத்திற்கு ஈடாக செலுத்தும் பங்களிப்பை வழங்க இது உதவும்.
55 வயது மற்றும் அதற்கும் குறைவான வயதுடைய ஊழியர்களுக்கான தற்போதைய மசே நிதிப் பங்களிப்பு விகிதம் ஊதியத்தில், ஊழியருக்கு 20 விழுக்காடு, முதலாளிகளுக்கு 17 விழுக்காடு ஆக உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இளைய ஊழியர்களுக்கு அதிக விகிதம் கட்டாயம். வீட்டுக் கடன் கட்டுவதற்கு அவர்களுக்கு மசே நிதிச் சேமிப்பு அதிகம் தேவை. மேலும் கூட்டு வட்டியிலிருந்து அதிக அனுகூலம் பெற முடியும் என்று மனிதவள அமைச்சு கூறியது.
முதிய இணையவழி ஊழியர்கள் தங்கள் மசே நிதிப் பங்களிப்பை அதிகரிக்க காலவரம்பு இல்லை. அவர்கள் விருப்பப்படி செய்யலாம். ஆனால். முடிவு செய்த பின்னர் மாற்ற முடியாது.
முன்கூட்டியே விருப்பத் தேர்வை ஊக்குவிக்க தேசியத் தொழிற்சங்க காங்கிரசுடன் அணுக்கமாகப் பணியாற்றி வருவதாக அமைச்சு குறிப்பிட்டது. அதனால் வயதான ஊழியர்களும் அதிக காலத்துக்கு கூட்டு வட்டியிலிருந்து அனுகூலம் பெறலாம் என்று அது சுட்டியது.
மசே நிதி விகிதம் அதிகமாவதால், கையில் கிடைக்கும் ஊதியம் குறைவது குறித்த கவலைக்குத் தீர்வுகாணும் வகையில், குறைந்த வருமான ஊழியர்கள் பங்களிப்புகளில் ஆண்டுக்கு ஆண்டு அதிகரிப்பை ஈடுசெய்ய மாதாந்தர ரொக்க வழங்கீட்டைப் பெறுவார்கள் என்று அமைச்சு கூறியது.


