சிறுவயதிலேயே ஆரோக்கியமான தேர்வை வாழ்க்கை முறையாக்க உதவும் தேசிய உத்தியாக அனைத்து தொடக்கநிலை 4, 5 வகுப்பு மாணவர்களுக்கும் பாலர் வகுப்பு 1, 2 மாணவர்களும் 2026 ஜனவரி முதல் தனிப்பட்ட சுகாதாரத் திட்டங்களைப் பெறுவர்.
வயதாகும்போது நோய்களைத் தடுப்பதும் இத்திட்டத்தின் நோக்கம்.
இத்திட்டம் பாலர் பள்ளிகளில் கட்டம் கட்டமாக செயல்படுத்தப்பட்டு, 2026 இறுதிக்குள் கிட்டத்தட்ட 1,800 பாலர் பள்ளிகளில் அறிமுகமாகிவிடும் என எதிர்பார்க்கப்படுவதாக சுகாதார, கல்வி மற்றும் சமூக குடும்ப மேம்பாட்டு அமைச்சுகள் புதன்கிழமை (ஜனவரி 21) வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தன.
“பாலர் பள்ளிப் பருவமானது விருப்பங்களும் பழக்கங்களும் உருவாகும் முக்கியமான காலம். அவை வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியத்திற்கான அடித்தளமாக அமைகின்றன,” என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.
பள்ளி சுகாதாரப் பரிசோதனையின் ஒரு பகுதியாக 2026ஆம் ஆண்டில் தொடக்கநிலை 4, 5 மாணவர்கள் ஏறக்குறைய 80,000 பேர் சுகாதாரத் திட்டம் மூலம் பயன்பெறுவர்.
கடந்த 2025 ஜனவரியில் தொடங்கப்பட்ட ‘க்ரோ வெல் எஸ்ஜி’ (Grow Well SG) திட்டம், பிள்ளைகள் தங்கள் கைப்பேசிகளை அதிகம் பயன்படுத்தாமல் இருப்பது, சமநிலையான உணவு உண்டது, உடலை இயக்கும் செயல்களில் ஈடுபடுவது, போதியளவு தூங்குவது ஆகியவற்றை பள்ளிகள், சுகாதார நிறுவனங்கள், சமூகத்தின் ஆதரவுடன் குடும்பங்கள் உறுதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
குடும்பத்திற்குள் உள்ள உறவுகள், நண்பர்களுடனான சமூகத் தொடர்புகள் குறித்தும் கவனம் செலுத்தப்படும். இது ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் முக்கிய கூறாகும்.
நல்ல உணவை, நல்ல தூக்கம், நன்கு படிப்பது, உடற்பயிற்சி செய்வது என்பதே இலக்கு.
தொடர்புடைய செய்திகள்
ஆண்டின் தொடக்கத்தில் பெற்றோர் வழங்கிய தகவலைக் கொண்டு, ஒவ்வொரு பிள்ளையின் ஆர்வம், பழக்கவழக்கங்களின் அடிப்படையில் வாழ்க்கை முறை வழிகாட்டுதலை இந்தச் சுகாதாரத் திட்டம் வழங்கும்.
சுகாதார மேம்பாட்டுக் கழகத்தின் வருடாந்திர பள்ளி சுகாதாரப் பரிசோதனைத் திட்டத்தின்போது பிள்ளைகள் வாழ்க்கை முறை பரிந்துரைகளைப் பெறுவர்.
வீட்டில் கற்றலை ஆதரிக்க, பிள்ளைகளை ஈடுபடுத்தவும் வீட்டில் ஆரோக்கியமான பழக்கங்களை வலுப்படுத்தவும் பெற்றோருக்கும் நடவடிக்கை தாள்கள் வழங்கப்படும். பள்ளியில் ஆரோக்கியமான பழக்கங்களை ஊக்குவிப்பதற்கான வளங்களுடன் கூடிய கருவிகளைப் பாலர் பள்ளிகள் பெறும்.
சிங்கப்பூரின் அனைத்து பிரதான பள்ளிகளிலும் தனிப்பட்ட சுகாதாரத் திட்டம் தொடக்கநிலை 1 முதல் 3 வரை பயிலும் மாணவர்களுக்குப் படிப்படியாக செயல்படுத்தப்படும் என்று சுகாதார அமைச்சு 2025 ஜனவரியில் அறிவித்தது. அவர்களில் ஏறக்குறைய 114,000 பேர் 2025ஆம் ஆண்டில் தங்களது சுகாதாரத் திட்டங்களைப் பெற்றனர்.
பாலர் வகுப்பு 1, 2 பிள்ளைகளுக்கு இத்திட்டம் 2025 ஜூலையில் ஆறு பாலர் பள்ளிகளில் முன்னோட்டமாகச் செயல்படுத்தப்பட்டது. கிட்டத்தட்ட 840 பிள்ளைகளை எட்டிய அத்திட்டம் குறித்து பெற்றோரும் பாலர் பள்ளி நடத்துநர்களும் ஆக்ககரமான கருத்துகளைத் தெரிவித்ததாக கூட்டறிக்கை தெரிவித்தது.
வரும் 2027ஆம் ஆண்டு முதல் தொடக்கநிலை 6 மாணவர்களுடன் வாழ்க்கை முறை தெரிவுகள் குறித்துப் பள்ளிகள் கலந்துரையாடும். முந்தைய ஆண்டுகளில் பெற்ற சுகாதாரத் திட்டங்களையும் வளங்களையும் கொண்டு அந்த உரையாடல் இடம்பெறும்.
இது பள்ளிப் பாடத்திட்டம் மூலம் சுகாதாரச் செய்திகளை மீண்டும் வலியுறுத்தும், தற்போதைய நடைமுறைகளான உடற்கல்வி, பண்பு- குடிமைக் கல்வி வகுப்புகள் ஆகியவற்றை முழுமையாக்கும் என்று அறிக்கை தெரிவித்தது.
பெற்றோர் தங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத் திட்டங்களைப் பயன்படுத்தி உரையாடல்களுக்கு வழிகாட்ட, வீட்டில் ஆரோக்கியமான பழக்கங்களை வலுப்படுத்த ஊக்குவிக்கப்படுகிறார்கள். குழந்தைகளுக்கான சுகாதாரத் திட்டம் பற்றிய மேல்விவரங்களை https://go.gov.sg/childhealthplan என்ற இணையப்பக்கத்தில் காணலாம்.

