சிங்கப்பூரை 1959 முதல் ஆட்சி செய்து வரும் மக்கள் செயல் கட்சியின் (மசெக) மாநாடு சனிக்கிழமை (நவம்பர் 23) தொடங்கியது. மாநாட்டின் முதலாம் நாளான சனிக்கிழமை, கட்சியின் தலைமைச் செயலாளரும் மூத்த அமைச்சருமான லீ சியன் லூங் நாட்டிற்கு ஆற்றிய சேவைகளுக்காக அவருக்குக் கட்சித் தலைவர் ஹெங் சுவீ கியட் புகழாரம் சூட்டினார்.
மசெக விருது விழா, மாநாட்டில் சிறப்புரையாற்றிய திரு ஹெங், முன்னாள் பிரதமர் லீயின் 40 ஆண்டுகால சேவைக்கும் தலைமைத்துவத்துக்கும் உளமார நன்றி கூறினார்.
“பிரதமராக, கட்சித் தலைமைச் செயலாளராக அவரது வழிகாட்டுதலின்கீழ் உலகளாவிய பொருளியல் இடர், கொவிட்-19 நெருக்கடி உள்ளிட்ட பல சவால்களை சிங்கப்பூர் எதிர்கொண்டது. ஆசியாவை உலகின் பிறபகுதிகளுடன் இணைக்கும் வகையில் நாட்டின் முன்னேற்றத்தை முன்னெடுத்தார் திரு லீ.
“இந்த மாற்றம், நிறுவனங்களும் ஊழியர்களும் உலகப் பொருளியலில் புதிய வாய்ப்புகளைக் கைப்பற்ற ஊக்குவித்தது,” என்று நினைவுகூர்ந்தார் துணைப் பிரதமர் ஹெங்.
வளர்ச்சியின் பலனை அனைவருடனும் பகிர்ந்துகொள்ளும் வகையில் பரிவுமிக்க ஒருங்கிணைந்த சமுதாயத்தை உருவாக்க உதவிய திரு லீயின் வழிகாட்டுதல், அறிவாற்றல், முன்னறியும் திறன் எல்லாவற்றுக்காகவும் கட்சியின் சார்பில் அவருக்கு நன்றி நவில்வதாகத் தெரிவித்தார் திரு ஹெங்.
நிகழ்வில் திரு லீக்கு சிறப்பு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. அப்போது மேடையில் பேசிய திரு லீ, “மக்களின் ஆதரவின்றி என்னால் எதையும் செய்திருக்க இயலாது. மக்களுக்குச் சேவையாற்ற இதுவரை வாய்ப்பளித்ததற்கு நன்றி,” என்றார்.
அடுத்த ஆண்டு வரவிருக்கும் பொதுத் தேர்தலுக்காகக் கட்சியினர் கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் திரு லீ.
நிகழ்வின் ஓர் அங்கமாக, சிங்கப்பூருக்குச் சிறப்பாகச் சேவையாற்றிய 448 ஆர்வலர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
ஆக உயரிய விருதாகக் கருதப்படும் ‘பெருமைக்குரிய சேவைக்கான நட்சத்திர விருது’ தமது வாழ்க்கையை ஏறத்தாழ அரைநூற்றாண்டு காலமாகத் தொண்டூழியத்துக்கு அர்ப்பணித்த முனைவர் எஸ்.வாசுவுக்கு வழங்கப்பட்டது.
விருது பெற்றது குறித்து தமிழ் முரசிடம் பேசிய அவர், “சமூகத்திற்குச் சேவையாற்ற இளையர்கள் திரளாக முன்வரவேண்டும், அப்போதுதான் பிரச்சினைகள் குறைந்து வளமாக நாம் முன்னேற்றம் காணலாம்,” என்று கூறினார்.
பொதுத் தேர்தலில் மக்களின் வலுவான ஆதரவை வெல்ல அறைகூவல்
முன்னதாக, நிகழ்ச்சியில் பேசிய துணைப் பிரதமர் ஹெங், அடுத்த பொதுத் தேர்தலில் மக்களின் வலுவான ஆதரவை வெல்ல மசெகவினருக்கு அறைகூவல் விடுத்தார்.
சிங்கப்பூர் எக்ஸ்போவில் மாநாட்டின் முதல் நாளன்று திரண்டிருந்த 3,000க்கும் அதிகமான மசெக ஆர்வலர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், புதிய தலைமுறை வாக்காளர்களுடன் தொடர்புகளை விரிவாக்கி ஆழப்படுத்தும் வேளையில், அனைத்து சிங்கப்பூரர்களையும் கட்சி தொடர்ந்து பிரதிநிதிப்பதும் முக்கியம் என்றார்.
கட்சியின் துணைத் தலைமைச் செயலாளரான பிரதமர் லாரன்ஸ் வோங்கை ஆதரிக்குமாறு கட்சி உறுப்பினர்களிடம் வலியுறுத்திய திரு ஹெங், நாட்டை முன்னேற்றுவதில் சக சிங்கப்பூரர்களை அணிதிரட்டுமாறும் கேட்டுக்கொண்டார்.
ஈராண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மசெக மாநாட்டின் இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை, தலைமைத்துவப் புதுப்பிப்பு குறித்து திரு லீ முக்கிய உரையாற்றவுள்ளார்.