சிறார் பாலியல் துன்புறுத்தல் பதிவுகள்: பெற்றோருக்கும் தொடர்பு

2 mins read
54e8e59c-49f9-4130-8ab0-84dd36de521c
சிறார் துன்புறுத்தல் பதிவுகள் தொடர்பில் சிங்கப்பூர் காவல்துறை மேற்கொண்ட சோதனைகளில் ஒன்று. - படம்: சிங்கப்பூர் காவல்துறை

அண்மை ஆண்டுகளாக சிறாரை ஆபாசமாகப் படமெடுத்து இணையத்தில் பதிவேற்றம் செய்யும் நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாக வல்லுநர்கள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்துள்ளனர்.

2019ஆம் ஆண்டிலிருந்து சென்ற ஆண்டுவரை அத்தகைய செயல்களின் எண்ணிக்கை 87 விழுக்காடு அதிகரித்ததாக உலகளவில் மேற்கொள்ளப்பட்ட கருத்தாய்வில் தெரியவந்தது. சிறார் பாலியல் செயல்களில் ஈடுபடும் படங்களிலும் காணொளிகளிலும் அவர்கள் துன்புறுத்தப்படும் காட்சிகளும் இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவல் நிலைமையை மோசமாக்கியது. சிறார் ஆபாசப் படங்கள், காணொளிகளை நாடுவோருரின் எண்ணிக்கை அந்தக் காலகட்டத்தல் பெரிய அளவில் அதிகரித்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்குத் தகவல் கிடைத்தது.

ஊரடங்கு, பாதுகாப்பு இடைவெளி விதிமுறைகள் போன்ற காரணங்களால் இணையத்தில் அத்தகைய செயல்களை மேற்கொள்வது எளிதானதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

சிறார் பாலியல் துன்புறுத்தல் பதிவுகளைப் பதிவிறக்கம் செய்வோர் உலகின் எல்லா பகுதிகளிலும் இருக்கின்றனர் என்று இதன் தொடர்பில் வியட்னாம் தலைநகர் ஹனோயில் நடைபெற்ற பயிற்சி அமர்வில் தெரிவிக்கப்பட்டது. சிறார் பாதுகாப்பு தொடர்பில் புகார் கொடுப்பது குறித்து இம்மாதம் நடத்தப்பட்ட அதில் கலந்துகொண்ட பேச்சாளர்கள் அதைத் தெரிவித்தனர்.

சிங்கப்பூரும் விதிவிலக்கல்ல. 2020ஆம் ஆண்டிலிருந்து இங்கு சிறார் பாலியல் துன்புறுத்தல் பதிவுகள் தொடர்பில் சுமார் 140 முறை காவல்துறையினர் விசாரணை நடத்தியிருப்பதாக உள்துறை துணை அமைச்சர் சுன் ஷுவெலிங் கடந்த செப்டம்பர் மாதம் சொன்னார்.

அத்தகைய பதிவுகளை வைத்திருப்பது 2020ஆம் ஆண்டு முதல் குற்றமாகும். குற்றவாளிகளுக்கு ஐந்தாண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை விதிக்கப்படுவது உறுதி. அபராதம், பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.

சிங்கப்பூரில் சிறார் பாலியல் துன்புறுத்தல் பதிவுச் சம்பவங்கள் 2020லிருந்து அதிகரித்து வருவதாக சிங்கப்பூர் நீதித் துறை புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. 2020ல் அத்தகைய ஒரு சம்பவம் பதிவானது. ஆனால், அவை 2022ல் ஐந்துக்கும் 2023ல் ஏழுக்கும் கூடின.

காவல்துறை நடத்திய சோதனைகளில் சிங்கப்பூரர்கள் பலர் பிடிபட்டுள்ளனர்.

சிறார் பாலியல் துன்புறுத்தல் செயல்களில் பெற்றோர், உறவினரும் துணைபோவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக, பிலிப்பீன்சில் இடம்பெறும் 80 விழுக்காட்டுக்கும் மேலான இணையம்வழி நடக்கும் சிறார் பாலியல் துன்புறுத்தல் செயல்களுக்குப் பெற்றோரும் உறவினரும் துணைபோவதாக அனைத்துலக நீதி இயக்கம் (International Justice Mission - IJM) எனும் மனித உரிமை அமைப்பின் ஆசிய பசிபிக் வட்டார உத்தி, தாக்கப் பிரிவு (regional strategy and impact) இயக்குநர் சின்னி லிம் குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்ட சிறாரில் 41 விழுக்காட்டினர் பெற்றோரின் கைகளிலேயே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதாகவும் 42 விழுக்காட்டினர் மற்ற உறவினர் இழைக்கும் துன்புறுத்தலுக்கு ஆளாவதாகவும் அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்