பகடிவதைச் சம்பவங்களைப் பள்ளிகளிடமே விட்டுவிடலாம்: பெற்றோருக்குக் கல்வி அமைச்சர் அறிவுரை

3 mins read
ca97f488-326f-4569-843f-e6b8c522082a
பள்ளிகளில் இடம்பெறும் பகடிவதை, சண்டைச் சம்பவங்களைப் பற்றி நாடாளுமன்றத்தில் பேசினார் கல்வி அமைச்சர் சான் சுன் சிங். - படம்: gov.sg

பிள்ளைகள் சம்பந்தப்பட்ட பகடிவதை, சண்டைச் சம்பவங்களைக் கூடுமானவரை பள்ளிகளையும் அதிகாரிகளையும் கையாள விட்டுவிட்டு பெற்றோர் தலையிடாமல் இருக்குமாறு கல்வி அமைச்சர் சான் சுன் சிங் கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்தகைய சூழல்களில் பெற்றோர் பதற்றத்துடன் இருப்பதைப் புரிந்துகொள்ளமுடியும் என்றாலும் வதந்திகளைப் பரப்புவது, பிரச்சினையில் தலையிட்டு நிலைமையை மோசமாக்குவது போன்ற செயல்களில் ஈடுபடவேண்டாம் என்று திரு சான் கேட்டுக்கொண்டார்.

இத்தகைய பிரச்சினைகளைக் கையாளும்போது அவை தொடர்பான தகவல்கள், சம்பந்தப்பட்ட பிள்ளையின் குடும்ப சூழ்நிலை ஆகியவற்றைக் கல்வி அமைச்சு வெளியிடுவதில்லை. பிள்ளையின் குடும்பத்தின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மதிப்பளிக்கவும் இத்தகைய விவகாரங்களைக் கவனமாகக் கையாள்வதற்காகவும் கல்வி அமைச்சு அவ்வாறு செய்வதாக திரு சான் செவ்வாய்க்கிழமையன்று (பிப்ரவரி 4) நாடாளுமன்றத்தில் கூறினார்.

அட்மிரல்டி உயர்நிலைப் பள்ளியில் நேர்ந்த இரு சம்பவங்கள் சென்ற மாதம் வெளிச்சத்துக்கு வந்தன. அவற்றைப் பற்றித் தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினரான சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் ஹேஸல் புவா எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் சான் பதிலளித்தார்.

அந்த இரு சம்பவங்களிலும் பள்ளி தகுந்த ஒழுங்கு நடவடிக்கைகளை எடுத்துவிட்டதாக திரு சான் தெரிவித்தார்.

சென்ற மாதம் ஏழாம் தேதியன்று உட்லண்ட்சில் உள்ள அட்மிரல்டி உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 12 வயது மாணவர், தனது சக வகுப்பு மாணவரைத் தாக்கியதாக நம்பப்படுகிறது. தாக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவரின் தலையில் வெட்டுக் காயம் ஏற்பட்டது.

“பாடங்களுக்கு இடையிலான நேரத்தில் புதிய உயர்நிலை ஒன்று மாணவர்கள் இருவருக்கிடையே சண்டை ஏற்பட்டது. அதில் ஒரு மாணவர், இன்னொருவரின் தலையில் நெகிழியால் ஆன நீர் போத்தலைக் கொண்டு தாக்கினார். அதனால் அம்மாணவரின் தலையில் வெட்டுக் காயம் ஏற்பட்டது,” என்று அமைச்சர் சான் விவரித்தார்.

“அச்சம்பவத்தைக் கண்டவுடனேயே வகுப்பின் முதன்மை ஆசிரியர் மாணவர்களைப் பிரித்துவிட்டார். காயமடைந்த மாணவரின் தலையில் ஏற்பட்ட வெட்டுக் காயத்துக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டது,” என்று குறிப்பிட்ட திரு சான், பள்ளி, அவசர மருத்துவ உதவி வாகனத்துக்கு அழைப்பு விடுத்ததாகவும் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மாணவருக்குத் தகுந்த நேரத்தில் சரியான மருத்துவப் பராமரிப்பு கிடைத்ததை பள்ளி உறுதிப்படுத்தியது என்றும் அவர் சொன்னார். பள்ளி, மாணவரின் பெற்றோருடன் தொடர்பில் இருந்ததுடன் தகுந்த ஆதரவளித்தது என்றும் காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைத்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

தாக்குதல் மேற்கொண்டதாகச் சொல்லப்படும் மாணவர் தற்காலிகமாகப் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் பள்ளிக்குத் திரும்பும்போது அவர் மீது மேலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திரு சான் விளக்கினார்.

முன்னதாக, 2023ஆம் ஆண்டில் அட்மிரல்டி உயர்நிலைப் பள்ளியில் படித்துவந்த 15 வயது மாணவி ஒருவர் உயிரை மாய்த்துக்கொண்டார். பகடிவதைக்கு ஆளாகி கடும் மனச்சோர்வால் பாதிக்கப்பட்டது அதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டது.

அத்தகைய சம்பவங்களின் விவரங்களை வெளியிடாமல் இருக்கும்போது பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள் உள்ளிட்டோர் இணையத்தில் இடம்பெறும் அவதூறுப் பேச்சு போன்றவற்றுக்கு ஆளாவதாக திரு சான் சுட்டினார்.

நல்ல முன்னுதாரணமாக விளங்கவும், அன்பாகவும் உதவியாகவும் இருப்பதற்கு எத்தகைய பதில் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்பதைக் கருத்தில்கொண்டு செயல்படவும் பெற்றோரும் பொதுமக்களும் இணைந்து பணியாற்றவேண்டும் என்று அமைச்சர் சான் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்