சாங்கி விமான நிலையத்திற்கு வந்துசென்ற பயணிகள் எண்ணிக்கை மூன்றாம் காலாண்டில் அதிகரிப்பு

சாங்கி விமான நிலையத்திற்கு வந்துசென்ற பயணிகள் எண்ணிக்கை மூன்றாம் காலாண்டில் அதிகரிப்பு

படம்: சாங்கி விமான நிலையக் குழுமம்

19 Oct 2026 - 8:04 pm

2 mins read

சாங்கி விமான நிலையத்திற்கு இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டில் 17.4 மில்லியன் பயணிகள் வந்துசென்றுள்ளனர். இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 0.4 விழுக்காடு அதிகம்.

கடந்த காலாண்டுடன் ஒப்பிடுகையில், பயணிகளின் எண்ணிக்கை 17.2 மில்லியனிலிருந்து 200,000 உயர்ந்துள்ளது.

மூன்றாம் காலாண்டில் பயணிகள் எண்ணிக்கை கூடியதற்கு ஐரோப்பா, வடகிழக்காசியா, தென்மேற்கு பசிபிக் வட்டாரங்கள் முக்கியப் பங்கு வகிப்பதாகச் சாங்கி விமான நிலையக் குழுமம் திங்கட்கிழமை (அக்டோபர் 19) தெரிவித்தது.

இவற்றில் சீனா, இந்தோனீசியா, ஆஸ்திரேலியா, மலேசியா, இந்தியா ஆகியவற்றிலிருந்து அதிகமானோர் இங்கு வந்துபோயினர்.

மேலும், முதல் 10 சந்தைகளில் வியட்நாம் ஆண்டுக்கு ஆண்டு கணக்கில் 20.5 விழுக்காட்டுடன் வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது; அதே வேளையில் சீனா 10.4 விழுக்காட்டு வளர்ச்சியைக் கண்டுள்ளது என்றும் அது குறிப்பிட்டது.

இதற்கிடையே, கோலாலம்பூர், ஜகார்த்தா, பாலியிலுள்ள டென்பசார், பேங்காக், ஷாங்காய் ஆகியவை இந்தக் காலாண்டில் மிகவும் துடிப்புடன் இயங்கிய ஐந்து வான்வழிப் பாதைகளாக இருந்தன.

விமானங்களின் புறப்பாடு, தரையிறக்கம் உள்ளிட்ட மொத்த விமானப் போக்குவரத்து 93,900 ஆக இருந்தது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டை விட 2.5 விழுக்காடு அதிகம். இது சென்ற காலாண்டில் பதிவான 92,400 என்ற எண்ணிக்கையைக் காட்டிலும் கூடுதலாகும்.

இக்காலகட்டத்தில், சாங்கி விமான நிலையம் 574,000 டன் சரக்குகளைக் கையாண்டுள்ளது. ஆண்டு அடிப்படையில் இது 8 விழுக்காடு அதிகம்.

செயற்கை நுண்ணறிவு சார்ந்த பகுதிமின்கடத்திகள், மின்னணுப் பொருள்களின் ஏற்றுமதிக்கு வலுவான தேவை இருந்ததே இதற்குக் காரணம் என்று குழுமம் தெரிவித்தது.

மூன்றாம் காலாண்டில் வான்வழிப் பயணத்திற்கான தேவை சீராய் இருந்ததாக மேம்பாட்டுக்கான சாங்கி விமான நிலையக் குழுமத்தின் நிர்வாகத் துணைத் தலைவர் லிம் சிங் கியாட் குறிப்பிட்டார்.

“விமான நிறுவனங்கள் அதிகரிக்கும் எரிபொருள் செலவு, இதரச் செயல்பாட்டு நெருக்குதல்களைச் சந்தித்து வருகின்றன. இந்நிலையிலும் இணைப்புகளை வலுப்படுத்தவும் நல்ல வாய்ப்புள்ள வான்வழிப் பாதைகளை மேம்படுத்தவும் முன்னணி உலகளாவிய விமான நடுவமாகச் சாங்கியின் இடத்தை உயர்த்தும் புதிய வாய்ப்புகளைப் பின்தொடரவும் எங்கள் பங்காளிகளுடன் இணைந்து செயல்படுவதில் நாங்கள் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறோம்,” என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
சாங்கி விமான நிலையம்பயணிஐரோப்பாஆசியா