சிங்கப்பூரில் உள்ள தம்பதிகள், கூடுதல் பிள்ளைகள் பெற்றுக்கொள்ள தற்போது வழங்கப்படும் தந்தையர் விடுப்பு மட்டும் போதாது என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
தந்தையர் விடுப்பைப் பயன்படுத்திய தந்தைகள் இரண்டாம், மூன்றாம் பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ளவில்லை என்று ஆய்வு சுட்டியது.
தந்தையர் விடுப்பைப் பயன்படுத்தாதோருக்கும் அவற்றைப் பயன்படுத்தியோருக்கும் இடையே பெரிய வித்தியாசம் தென்படவில்லை.
சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகக் குழந்தை மருத்துவர் பேராசிரியர் ஜீன் இயுங் ஆய்வை நடத்தினார்.
சிங்கப்பூரில் 1,835 குடும்பங்களிடம் நீண்டகால ஆரம்பக்கட்ட மேம்பாட்டு அமைப்பு மேற்கொண்ட ஆய்வை அடிப்படையாகக் கொண்டு பேராசிரியர் இயுங்கின் ஆய்வு நடத்தப்பட்டது.
நார்டிக் நாடுகளில் தந்தையர் விடுப்புக்கும் கூடுதல் பிள்ளைகள் பிறப்பதற்கும் இடையே தொடர்பிருப்பது கண்டறியப்பட்டது. ஆனால், சிங்கப்பூரில் அவ்வாறு இல்லை என்பதைப் பேராசிரியர் இயுங் நடத்திய ஆய்வு காட்டியது.
சிங்கப்பூரில் வழங்கப்படும் தந்தையர் விடுப்புக் காலம் குறைவாக இருப்பதாலும் பிள்ளைகளைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு பெரும்பாலும் தாய்மார்களுடையது என்ற பரவலான எண்ணம் இருப்பதாலும் தந்தையர் விடுப்பில் செல்லும் தந்தையர் கூடுதல் பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ளாமல் இருக்கலாம் என்று பேராசிரியர் இயுங் தெரிவித்தார்.
எனவே, தந்தையருக்கான விடுப்புக் காலத்தைக் கூட்டுவது, பிள்ளை வளர்ப்பில் ஆண்களுக்கும் சம பங்கு உண்டு என்ற எண்ணத்தை உருவாக்குவது, நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகள், விருப்பமுள்ள தந்தையருக்கு விடுப்புக் கொடுப்பது ஆகிய மாற்றங்களுக்குப் பேராசிரியர் இயுங்கின் ஆய்வு அழைப்பு விடுக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
ஆய்வில் கலந்துகொண்ட தந்தையரில் கிட்டத்தட்ட 24 விழுக்காட்டினர் ஒரு வாரம் தந்தையர் விடுப்பையும் ஏறக்குறைய 48 விழுக்காட்டினர் இரண்டு வார தந்தையர் விடுப்பையும் பயன்படுத்தினர். எஞ்சிய 28 விழுக்காட்டினர் தந்தையர் விடுப்பில் செல்லவில்லை.
தந்தையர் விடுப்பில் ஒரு வாரம் சென்றோர், இரண்டு வாரம் சென்றோர், விடுப்பை அறவே எடுக்காதோர் என அனைவரையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது எந்தத் தந்தையரின் குடும்பத்திலும் கூடுதல் பிள்ளைகள் பிறக்கவில்லை.
இயந்திரங்களை இயக்குவது, துப்புரவுப் பணி ஆகிய துறைகளில் பணியாற்றும் தந்தையரில் பெரும்பாலோர் தந்தையர் விடுப்பைப் பயன்படுத்தவில்லை.
அதிக வருமானம் உள்ள குடும்பங்களில் தந்தையர் விடுப்பைப் பயன்படுத்தியதுடன் இரண்டாம் பிள்ளையையும் பெற்றுக்கொண்டனர். ஆனால், பட்டக்கல்வி அல்லது அதற்கும் உயர்வான கல்வித் தகுதியுடைய தாய்மார்கள் மூன்றாவது பிள்ளையைப் பெற்றுக்கொள்வதில் அதிக ஆர்வம் காட்டவில்லை என்று ஆய்வு சுட்டியது.

