பேக்ஸ்லொவிட் கொவிட்-19 மருந்து இனி இலவசமாக வழங்கப்படாது

2 mins read
1a96b35f-3ce8-4abb-9c42-e0d316059e03
பேக்ஸ்லொவிட்டின் இரு மருந்து வகைகளில் ஒன்று சோதனையிடப்படுகிறது. - கோப்புப் படம்: ஃபைஸர்

கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு ஆளாகி மோசமாக நோய்வாய்ப்படும் அபாயம் உள்ள பெரியவர்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் பேக்ஸ்லொவிட் (Paxlovid) மருந்து கைவசம் போதுமான அளவில் இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும், தேவைப்படும்போது மட்டுமே அவை வழங்கப்படும் என்றும் அமைச்சு கூறியுள்ளது. மேலும், அந்த மருந்து இனி இலவசமாக வழங்கப்படாது என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இவ்வாண்டு நவம்பர் மாதம் முதல் சுகாதார அமைச்சு, அடிப்படை சுகாதாரப் பராமரிப்பு வழங்கப்படும் இடங்களில் அந்த மருந்துக்கான செலவை முழுமையாக ஏற்றுக்கொள்வதை நிறுத்தியது அதற்குக் காரணம்.

ஃபைஸர் நிறுவனத்தின் பேக்ஸ்லொவிட், வாய்வழி உட்கொள்ளப்படும் இரு மருந்து வகைகளைக் கொண்டுள்ளது. அவற்றில் ஒன்று நிர்மட்ரெல்விர் (nirmatrelvir), மற்றொன்று ரிட்டொனவிர் (ritonavir).

பேக்ஸ்லொவிட் 2022ஆம் ஆண்டில் குறிப்பிட்ட பலதுறை மருந்தகங்களிலும் பொதுச் சுகாதார ஆயத்தநிலை மருந்தகங்களிலும் கட்டங்கட்டமாக வழங்கப்பட்டன. கொவிட்-19 கிருமித்தொற்றால் அதிகம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளவர்களுக்கு அம்மருந்தை வழங்கி, அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சாத்தியத்தைக் குறைக்க அந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.

வேறு பிரச்சினைகளுக்கு சிகிச்சை பெற்றுக்கொண்டிருப்போர், மூத்தோர், உடல் பருமனாக இருப்போர், மோசமான நுரையீரல், இதய, சிறுநீரக நோய்க்கு ஆளானோர் போன்றவர்கள் அத்தகைய நோயாளிகளில் அடங்குவர்.

2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18ஆம் தேதி முதல் தகுதிபெறும் நோயாளிகள் பேக்ஸ்லொவிட் மருந்தைப் பெற சம்பந்தப்பட்ட பொதுச் சுகாதார ஆயத்தநிலை மருந்தகங்கள் அல்லது குறிப்பிட்ட பலதுறை மருந்தகங்களுக்கு அனுப்பப்படுவர் என்று சுகாதார அமைச்சு அறிவித்திருந்தது. அவற்றில் மருத்துவர்கள், நோயாளிகளை சோதித்த பிறகு தேவைப்பட்டால் பேக்ஸ்லொவிட் மருந்து வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

எனினும், குறிப்பிடப்பட்ட மருந்தகங்கள் சிலவற்றில் பேக்ஸ்லொவிட் மருந்து கிடைக்கவில்லை என்று சில நோயாளிகள் தெரிவித்திருந்தனர்.

அதுகுறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேள்வி எழுப்பியதற்குப் பதிலளித்த சுகாதார அமைச்சின் பேச்சாளர் ஒருவர், “செலவு அல்லது நடைமுறைகள் சம்பந்தப்பட்ட காரணங்களினால் தனியார் மருத்துவர்கள், தங்கள் மருந்தகங்களில் பேக்ஸ்லொவிட் மருந்தை வைத்திருக்காமல் இருக்கலாம். அதனால் தங்களிடம் வரும் நோயாளிகளுக்கு அந்த மருந்து தேவை என்று எண்ணினால் அவர்கள் அதை வாங்க மருத்துவர்கள், மருந்து வாங்குவதற்கான ஆவணத்தை (prescription) வழங்குவர்,” என்று விளக்கினார்.

குறிப்புச் சொற்கள்