சிங்கப்பூரில் உள்ள மென்பொருள் நிறுவனம் ஒன்று தங்களுக்குச் சரியாக சம்பளம் வழங்கவில்லை என்று அதன் ஊழியர்கள் கூறுகின்றனர்.
அதனைத் தொடர்ந்து அந்நிறுவனத்திடம் மனிதவள அமைச்சு விசாரணை நடத்தி வருகிறது.
நேப்பியர் ஹெல்த்கேர் சல்யூஷன்ஸ் நிறுவனம் தங்களுக்கு முழுமையாக மாதச் சம்பளத்தை வழங்கவில்லை என்று அதன் முன்னாள் ஊழியர்கள் சிலர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினர். 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்தே சிலருக்கு முழு மாதச் சம்பளம் வழங்கப்படவில்லை என்று நம்பப்படுகிறது.
சிங்கப்பூரில் தலைமையகத்தைக் கொண்டுள்ள நேப்பியர் ஹெல்த்கேர் சல்யூஷன்சின் 12 ஊழியர்களுக்குத் தாங்கள் உதவி வருவதாக மனிதவள அமைச்சும் சர்ச்சை நிர்வாகத்துக்கான முத்தரப்புக் கூட்டணியும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் குறிப்பிட்டன. அந்த ஊழியர்கள் தங்களுக்குச் சம்பளம் சரியாக வழங்கப்படவில்லை என்று கூறுகின்றனர்.
வேலை நியமனச் சட்டத்தின்கீழ் நேப்பியர் ஹெல்த்கேர் சல்யூஷன்ஸ் குற்றங்களைப் புரிந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்படுவதாக மனிதவள அமைச்சும் சர்ச்சை நிர்வாகத்துக்கான முத்தரப்புக் கூட்டணியும் தெரிவித்தன. பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்குத் தொடர்ந்து உதவப்போவதாகவும் அவை குறிப்பிட்டன.
நேப்பியர் ஹெல்த்கேர் சல்யூஷன்ஸ் 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன் ஊழியர்களில் பெரும்பாலோர் இந்தியாவின் ஹைதராபாத் நகரில் செயல்படுவதாக லிங்க்ட்டின் சமூக ஊடகப் பக்கத்தில் தெரிய வந்துள்ளது.
ஹைதராபாத்தில்தான் நேப்பியர் ஹெல்த்கேர் சல்யூஷன்சின் உலகளாவிய மேம்பாட்டு நிலையம் அமைந்துள்ளது.
நோயாளிகளின் தகவல்களைக் காட்டும் தகவல் முறைகளை வழங்குவது, மருத்துவமனைகள், தாதிமை இல்லங்கள் போன்ற மருத்துவ நிலையங்களுக்கான செயற்கை நுண்ணறிவுச் சேவைகள்/கருவிகளை வழங்குவது போன்ற சேவைகளை அந்நிறுவனம் வழங்குவதாக அதன் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
தனது முன்னாள் ஊழியர்கள், தற்போதைய ஊழியர்கள் ஆகிய இரு தரப்பினருடனும் தங்களுக்கு எவ்வித சம்பளம் தொடர்பான பூசலும் இல்லை என்று நேப்பியர் ஹெல்த்கேர் சல்யூஷன்சின் பேச்சாளர் ஒருவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார். எனினும், அந்நிறுவனம் நிதி நெருக்கடியை எதிர்நோக்குவதால் சம்பளம் தாமதமாக வழங்கப்பட்டிருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.
தற்போதைய, முன்னாள் ஊழியர்களுக்குக் கொடுக்கவேண்டிய எஞ்சிய சம்பளத் தொகை முழுவதும் அடுத்த வாரத்துக்குள் வழங்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

