புகிஸ் வட்டாரத்தில் திங்கட்கிழமை (மார்ச் 17) மாலை ஒரு கார் பாதசாரிமீது மோதிய விபத்தில் 66 வயது மாது மருத்துவமனையில் மரணமடைந்தார். பிராஸ் பாசா ரோட்டை நோக்கிச் செல்லும் பென்கூலன் ஸ்திரீட்டில் நடந்த அந்த விபத்து குறித்து அன்றைய தினம் மாலை 5.15 மணியளவில் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (எஸ்சிடிஎஃப்) தெரிவித்தது.
சுயநினைவு இழந்த நிலையில் டான் டோக் செங் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்ட அந்த மாது சிகிச்சை பலனின்றி அங்கு உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறினர்.
அந்த விபத்தில் சிறு காயமடைந்த மற்றொருவர் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டதாக எஸ்சிடிஎஃப் குறிப்பிட்டது.
காரை ஓட்டிய 55 வயது ஆடவர் கவனக்குறைவாக வாகனம் ஓட்டி மரணத்தை விளைவித்த குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டு, விசாரணை தொடர்வதாக காவல்துறை தெரிவித்தது.
விபத்துக்குப் பிறகு எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றில் சன்ஷைன் பிளாசா வெளியில் உள்ள செடிகளுக்கு இடையே கார் இருப்பதையும் பல காவல்துறை அதிகாரிகள் சூழ்ந்து நிற்பதையும் காணமுடிந்தது.

