ஈசூனில் பிப்ரவரி 6ஆம் தேதி, தனிநபர் நடமாட்ட சாதனம் (பிஎம்டி) மோதியதால் காயமடைந்த 33 வயது நடையர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
‘பிஎம்டி’ பயன்படுத்தியவர் அந்த ஆடவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டார்.
இச்சம்பவம் குறித்த ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விக்குப் பதிலளித்த காவல்துறை, ஈசூன் அவென்யூ 9ஐ நோக்கிச் செல்லும் ஈசூன் ரிங் ரோட்டில் நடந்த விபத்து குறித்து இரவு 11.45 மணியளவில் தகவல் கிடைத்ததாகக் கூறியது.
காயமடைந்த நடையர் கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
அப்போது அவர் சுயநினைவுடன் இருந்ததாகக் காவல்துறை குறிப்பிட்டது.
இச்சம்பவம் குறித்து எஸ்ஜிரோடு விஜிலான்ட் ஃபேஸ்புக் பக்கத்தில் பிப்ரவரி 7ஆம் தேதி வெளியான காணொளியில் சாலைத் தடுப்புக்கு அருகே ஆடவர் ஒருவர் கவிழ்ந்து கிடப்பதைக் காணமுடிகிறது.
அவரது ஒரு காலில் காலணி காணப்படவில்லை.
கறுப்புச் சட்டையும் வெள்ளை அரைக்காற் சட்டையும் அணிந்த ஒருவர் சாலையின் நடுவே சாய்ந்து கிடந்த தனிநபர் நடமாட்டச் சாதனத்தைத் தூக்க முயல்வதும் பிறகு தடுமாறி அதன்மேல் விழுவதும் அந்தக் காணொளியில் பதிவாகியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
பிறகு அவர் சாலையின் நடுவில் கிடந்த சில பொருள்களைச் சேகரித்துக்கொண்டு சாலையோரம் செல்வதைக் காணமுடிகிறது.
சிறிது நேரத்தில் வேறொருவர் சாலையில் விழுந்து கிடந்த ஆடவருக்கு அருகில் செல்வதும் பதிவாகியுள்ளது.
சம்பவம் குறித்துக் காவல்துறை விசாரணை மேற்கொள்கிறது.