மக்கள் தொழில்நுட்பத் துறையில் வெற்றிபெற அதிக வாய்ப்புகள் தேவை: அதிபர் தர்மன்

4 mins read
2bea24db-c6db-4201-925c-e332af4bb07d
டாவோசில் நடைபெறும் உலகப் பொருளியல் மாநாட்டில் அதிபர் தர்மன் சண்முகரத்னம். - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு
multi-img1 of 2

ஏட்டுக் கல்வி, தொழில்நுட்பக் கல்விப் பாதைகளுக்கு இடையிலான படிநிலைகளைக் குறைக்க, நாடுகள் தொழில்நுட்பத் துறைகளில் சிறந்து விளங்கவும் தேர்ச்சி பெறவும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று அதிபர் தர்மன் சண்முகரத்தினம் தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெறும் உலகப் பொருளியல் மாநாட்டில் “வளர்ந்து வரும் சந்தைகளில் வரவிருக்கும் வேலைகளின் சவால்” என்ற தலைப்பில் புதன்கிழமை (ஜனவரி 21) உரையாற்றிய அதிபர் தர்மன், சிங்கப்பூர் இதில் கவனம் செலுத்துகிறது என்றார்.

உலகளவில் பெரும்பாலான மக்களின் முக்கிய அக்கறையான மேலும் சிறந்த வேலைகளை உருவாக்க அரசாங்கங்கள் செயல்படக்கூடிய ஒரு வழியாக திரு தர்மன் இதனைக் குறிப்பிட்டார்.

ஆசியா உள்பட உலகெங்கிலும் இன்னமும் அதிகளவில் ஏட்டுக் கல்வியைச் சார்ந்த கல்வி முறை உள்ளது. ஏட்டுக்கல்வியா, தொழில்நுட்பக் கல்வியா என்ற தேர்வாக இருக்கக்கூடாது. ஒவ்வொருவரும் தங்கள் ஆர்வத்துக்கும் திறன்களுக்கும் ஏற்ற பாதையில் சென்று சிறந்து விளங்குவதற்கான வழியாக கல்வி முறை இருக்க வேண்டும் என்றார் அவர்.

வாழ்க்கைத்தொழிலில் வளர்ச்சியும் பாதுகாப்புமுமே பெரும்பாலானோரின் தேவையாக உள்ளது. அதனால், வேலைகளே முக்கிய முன்னுரிமையாக இருக்க வேண்டும்.

வளரும் நாடுகளில் வேலைகளை உருவாக்க, உலகின் மற்ற பகுதிகளில் ஏற்கெனவே வெற்றபெற்ற அம்சங்களில் இருந்து தொடங்கலாம் என்றார் அவர்.

கிழக்கு ஆசியாவில் பல நாடுகளில் வேலை உருவாக்கம் ஒப்பீட்டளவில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது. மனித மூலதனத்தை வளர்ப்பதாலேயே அவை இதனைச் சாதித்துள்ளன.

இது கருவில் இருக்கும் குழந்தைக்கான சத்துணவில் இருந்து, ஆரம்பகால குழந்தை பருவ வளர்ச்சியில் தொடங்குகிறது என்ற திரு தர்மன், இந்தியாவில், தாய் சேய் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் கிராமப்புற குழந்தைகள் நல மையத் திட்டத்தை உதாரணமாகக் குறிப்பிட்டார்.

“இந்த ஆரம்பக் கட்ட முதலீடுகள் வாழ்நாள் முழுவதும் மிகப்பெரிய பங்களிப்பைக் கொண்டுள்ளன என்பதை அனைத்து ஆய்வுகளும் காட்டுகின்றன,” என்றார் அவர்.

உற்பத்தி, தற்போது மேம்பட்ட ரோபோடிக்ஸ், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) என தொழில்நுட்பம் சார்ந்ததாக உள்ளது. எனினும், வளரும் நாடுகளில் வேலை உருவாக்கத்திற்கான அதன் ஆற்றல் மறைந்துவிடவில்லை.

சீனா, வியட்னாம், பிரேசில், மலேசியா போன்ற நடுத்தர வருவாய் நாடுகளில் பல உற்பத்திகள் முதல் நிலையில் இல்லை என்பதை அவர் சுட்டினார்.

சீனா மிக உயர் திறன் நிலைக்கு முன்னேறியுள்ளது. எனினும், அது இன்னும் மேம்பட்ட உபகரணங்களைப் பயன்படுத்தி பாரம்பரிய குறைந்த நிலை உற்பத்தியை நிறைய செய்து வருகிறது, அதில் ஒரு பகுதியை ஆப்பிரிக்கா, தெற்காசியாவில் செய்ய முடியும் என்றால் உற்பத்தி வேலைவாய்ப்பில் பெரும் வளர்ச்சியை ஏற்படுத்த முடியும் என்ற திரு தர்மன், ஏற்கெனவே தமிழ்நாடு போன்ற இடங்களில் அவ்வாறு செய்யப்படுவதைக் குறிப்பிட்டார்.

பசுமை மாற்றம் வளரும் நாடுகளிலும் வேலை உருவாக்கத்தில் முக்கிய வாய்ப்பை வழங்குவதாகவும் திரு தர்மன் கூறினார்.

முதலில் உள்நாட்டில் நம்பிக்கை வளர்ப்பது முக்கியம்

டாவோசில் நடைபெறும் உலகப் பொருளியல் மாநாட்டு அரங்கு ஒன்றில், (இடமிருந்து) ஐக்கிய நாடுகள் சபையின் மேம்பாட்டுத் திட்ட (UNDP); நிர்வாகி அலெக்சாண்டர் டி குரூ, அதிபர் தர்மன் சண்முகரத்னம், அனைத்துலக நெருக்கடிநிலை குழுவின் (ICG) தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான கம்ஃபோர்ட் ஈரோ.
டாவோசில் நடைபெறும் உலகப் பொருளியல் மாநாட்டு அரங்கு ஒன்றில், (இடமிருந்து) ஐக்கிய நாடுகள் சபையின் மேம்பாட்டுத் திட்ட (UNDP); நிர்வாகி அலெக்சாண்டர் டி குரூ, அதிபர் தர்மன் சண்முகரத்னம், அனைத்துலக நெருக்கடிநிலை குழுவின் (ICG) தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான கம்ஃபோர்ட் ஈரோ. - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

மீள்திறன் கொண்ட உலக ஒழுங்கை உருவாக்குவதற்கான முயற்சிகளுக்கு மத்தியில், ஒவ்வொரு நாடும் உள்நோக்கிய பார்வையைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் அதிபர் தர்மன் சண்முகரத்னம் தெரிவித்துள்ளார்.

டாவோஸ் பொருளியல் மாநாட்டின் மற்றொரு குழு விவாதத்தில் பேசிய அதிபர் தர்மன், நாடுகள் நம்பிக்கையையும் ஒருவர் மீது மற்றவர் கொள்ளும் அக்கறையையும் வலுப்படுத்த வேண்டும் என்று கூறினார்.

தங்கள் சொந்த நாடுகளில் ஒருவரை ஒருவர் நம்பும் மக்கள் அனைத்துலக அளவில் ஒத்துழைப்பில் அதிக ஆர்வமும் நம்பிக்கையும் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது” என்றார் அவர்.

மக்களின் நம்பிக்கைகளையும் அச்சங்களையும் சமாளிப்பதன் மூலம் இதைச் சாதிக்க முடியும். பெரும்பாலானவர்கள் நல்ல வேலை, தொழில் பாதுகாப்பு, தாங்களும் பங்களிக்கிறோம் என்ற பெருமையையுமே விரும்புகிறார்கள்.

இவை அனைத்து சமூகங்களிலும் பொதுக் கொள்கையின் மையமாக இருக்க வேண்டும்.

தொழில்நுட்பம் ஒரே நேரத்தில் மிகவும் சக்திவாய்ந்த உதவியாகவும், எதிரியாகவும் இருக்கும் சகாப்தத்தில் இது மிகவும் முக்கியமானது என்று திரு தர்மன் குறிப்பிட்டார்.

பொருளியல் போட்டியால் தோற்றுப்போனவர்களுடன், புத்தாக்கத்துடன் வரும் படைப்பாற்றல் அழிவுக்கும் வழிவகுக்கக்கூடியது என்பதால் அவற்றின் மீதும் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றார் அவர்.

கடந்த 20 முதல் 30 ஆண்டுகளின் படிப்பினை என்னவெனில், உலகமயமாக்கல் எல்லா இடங்களிலும் வாழ்க்கைத் தரத்தை குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரிக்க வழிவகுத்தாலும் வேலைகளிலிருந்து பலரை விலக்கி அவர்களை தனியே விட்டுவிட்டது. உண்மையான படிப்பினைகள் உள்நாட்டு கொள்கைகளின் தோல்வியில் உள்ளது என்று அவர் கூறினார்.

“எனவே, உள்நாட்டில் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும்,” என்று திரு தர்மன் சொன்னார்.

புதிய உலக ஒழுங்கை உருவாக்குவதில் உள்ள பரந்த சவால்கள் குறித்தும் அதற்கான அவசரத் தேவை குறித்தும் திரு தர்மன் பேசினார்.

குறிப்புச் சொற்கள்