ஈரான் போரினால் முக்கிய எண்ணெய் விநியோகப் பாதை பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து, சிங்கப்பூரில் பெட்ரோல் விலை 2022ஆம் ஆண்டு உக்ரேன் போரின்போது விற்பனையானதைவிட அதிகரித்துள்ளது.
வெள்ளிக்கிழமை (மார்ச் 13) பிற்பகல் 2 மணி நிலவரப்படி, கால்டெக்ஸ் நிறுவனம் 95-ஆக்டேன் வகை பெட்ரோல் விலையை லிட்டருக்கு 10 காசுகள் உயர்த்தி $3.45 ஆக அறிவித்தது. இதற்கு முன்னர் 2022ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்த $3.42 என்பதே உச்ச விலையாக இருந்தது.
பிப்ரவரி 28ஆம் தேதி ஈரான் மீதான தாக்குதல் தொடங்கியதிலிருந்து, இந்த வகை பெட்ரோல் விலை கிட்டத்தட்ட 20 விழுக்காடு (57 காசுகள்) அதிகரித்துள்ளது.
வாகனத்தில் 50 லிட்டர் எரிபொருள் நிரப்ப வாகன ஓட்டிகள் தற்போது $28.50 கூடுதலாகச் செலவிட வேண்டும். இந்த வகை பெட்ரோல் லிட்டருக்கு $3.30 என்ற குறைந்தபட்ச விலையில் எஸ்பிசி-யில் விற்கப்படுகிறது.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ப் பதற்றத்தால் உலகளாவிய கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் பெட்ரோல் நிலையங்கள் ஒரு நாளில் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை விலையை உயர்த்தி வருகின்றன. 92-ஆக்டேன், டீசல் விலைகளும் 2022ல் ரஷ்யா உக்ரேன் மீது படையெடுத்தபோது இருந்த விலையைவிட அதிகரித்துள்ளன.

