மணிலா: பிலிப்பீன்சை உலுக்கிய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அங்கு அவசர நிவாரணப் பணிகளில் கைகொடுக்க 50,000 வெள்ளி நிதியுதவி வழங்கப்போவதாக சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பிலிப்பீன்சின் சிபு மாநிலத்தை உலுக்கியது. பலரைப் பலிவாங்கிய அந்த நிலநடுக்கத்தால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சிபுவில் உடனடி மருத்துவத் தேவைகள், நீர் சுத்திகரிப்பு போன்ற பணிகளுக்கு ஆதரவளிக்க சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் வழங்கும் நிதி பயன்படுத்தப்படும். பிலிப்பீன்ஸ் செஞ்சிலுவைச் சங்கம் அளிக்கும் மனநல உதவிக்கும் இத்தொகை உபயோகிக்கப்படும் என்று சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 3) தெரிவித்தது.
பாதிக்கப்பட்டோருக்கு தயார்நிலையில் இருக்கும் தண்ணீர்ச் சுத்திகரிப்பு இயந்திரங்களை (prepositioned water filters) வழங்குவது குறித்தும் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் தனது பங்காளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
பிலிப்பீன்சை நோக்கிச் செல்லும் மாட்மோ சூறாவளியையும் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் பேரிடர் கண்காணிப்புக் குழு கவனித்து வருகிறது.
சிபு நிலநடுக்கத்தில் குறைந்தது 72 பேர் மாண்டுவிட்டனர். சுமார் 20,000 பேர் வீடுகளிலிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.