மருத்துவ விடுப்பு (எம்சி) செல்லுபடியாக தாங்கள் மருந்தகத்தில் இருப்பதைப் படமெடுத்துக் காட்டவேண்டும் என்ற விதிமுறையை உள்ளூர் உணவக நிறுவனம் எய்ட்டீன் ஷெஃப்ஸ் (Eighteen Chefs) நடைமுறைப்படுத்தியிருந்தது; இப்போது விதிமுறை மீட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அந்த விதிமுறை தங்களுக்கு ஆச்சரியம் தந்ததாகவும் அது மிகவும் நியாயமற்றது என்று தாங்கள் கருதுவதாகவும் எய்ட்டீன் ஷெஃப்ஸ் ஊழியர்கள் சிலர் கூறியதாக ஷின் மின் ஊடகம் தெரிவித்தது. விதிமுறை குறித்த அறிவிப்பைத் தங்களின் மனிதவளப் பிரிவு வெளியிட்டதாகவும் மூத்த நிர்வாகத்தினரிடம் தெரியப்படுத்தி கொஞ்ச காலத்தில் விதிமுறை மீட்டுக்கொள்ளப்பட்டதாகவும் எய்ட்டீன் ஷெஃப்ஸ், ஷின் மின் ஊடகத்திடம் தெரிவித்தது.
சிங்கப்பூரின் வேலை நியமனச் சட்டத்தின்படி மருத்துவப் பதிவுச் சட்டம் அல்லது பல் மருத்துவப் பதிவுச் சட்டத்தின்கீழ் பதிவுசெய்யப்பட்டிருக்கும் மருந்தகங்கள் / மருத்துவமனைகள் வழங்கும் மருத்துவ விடுப்பு ஆவணங்களை நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும். மெய்நிகரில் மருத்துவரை நாடிய பிறகு வழங்கப்படும் மருத்துவ விடுப்பு ஆவணங்களும் அவற்றில் அடங்கும்.
ஷின் மின்னிடம் தகவல் தெரிவித்து ஐந்து நாள்கள் கழித்து விதிமுறை மீட்டுக்கொள்ளப்பட்டது தன்னிடம் தெரியப்படுத்தப்பட்டதாக எய்ட்டீன் ஷெஃப்ஸ் ஊழியர் ஒருவர் சொன்னார். எனினும், இதன் தொடர்பில் தனது சக ஊழியர்கள் தொடர்ந்து கவலையுடன் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

