தொழில்நுட்பம் துளிர்த்த காலத்திலிருந்து மனிதர்களின் நினைவுப் பெட்டகமாக இருந்துவருகின்றன நிழற்படங்கள். பல்வேறு காலகட்டங்களைப் படம்பிடித்துக் காலத்தால் அழியாத சுவடுகளை உருவாக்கித்தரும் அவற்றைக் கொண்டாடுகிறது சிங்கப்பூர்.
பத்தாவது முறையாக நடைபெறும் சிங்கப்பூர் அனைத்துலக நிழற்பட விழாவில் பற்பல நிழற்படங்களின் சங்கமத்தைக் கண்டுகளிக்க நல்ல வாய்ப்பு.
‘எனது முடிவில் என் தொடக்கம்’ (In My End Is My Beginning) என்ற தலைப்பின்கீழ் நிழற்பட விழா நடைபெறுகிறது. அதில் அனைத்துலகக் கண்காட்சிகள், கலந்துரையாடல்கள், பயிலரங்குகள் முதலியவை இடம்பெறும்.
திறன்பேசிகளும் சமூக ஊடகங்களும் நடப்பவற்றை அப்போதே படம்பிடித்து அடுத்த நொடியே மற்றவர்களின் பார்வைக்குக் கொண்டுசேர்க்கும் ஆற்றலைக் கொண்டுள்ளன.
அத்தகைய தொழில்நுட்பம் எட்டிப் பார்ப்பதற்குமுன் சிங்கப்பூர் எப்படி இருந்தது என்ற கேள்விக்குப் பதிலாக அமைகிறது நிழற்பட விழாவில் இடம்பெறும் திரைப்படத் தயாரிப்பாளரும் கலைஞருமான டான் பின் பின்னின் நிழற்படக் கண்காட்சி.
சிங்கப்பூர் மட்டுமின்றி சிங்கப்பூரர்களும் கடந்த 25 ஆண்டுகளில் எப்படி மாறியுள்ளனர் என்பதைக் காட்டுகின்றன டான் பின் பின்னின் கைவண்ணத்தில் எடுக்கப்பட்ட நிழற்படங்கள்.
திருமணங்கள், ஈமச்சடங்குகள், பள்ளிச் சுற்றுப்பயணங்கள், சமய வழிபாட்டுக் கூட்டங்கள், சமூக விளையாட்டு நிகழ்ச்சிகள், பேருந்து நிறுத்தங்கள், அடுக்குமாடிக் கட்டடக் கீழ்த்தளங்கள், அக்கம்பக்கக் கொண்டாட்டங்கள் என்று டான் பின் பின் எடுத்த நிழற்படங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
‘ஷாப்-ஹவுஸ் பை டெக்’ என்ற இடத்தில் டான் பின் பின்னின் 63 நிழற்படங்கள் கொண்ட கண்காட்சி இடம்பெறுகிறது. தமது கண்காட்சிக்கு டான் வைத்துள்ள பெயர் ‘சிங்கப்பூர் இன்டெக்ஸ்’.
வெளிநாட்டிலிருந்து 22வது வயதில் சிங்கப்பூருக்குத் திரும்பிய டான், சிங்கப்பூரர்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் செதுக்கிய காட்சிகளைத் தொடர்ந்து 12 மாதங்கள் படம் பிடித்தார்.
தமது நிழற்படக் கருவி மூலம் கிட்டத்தட்ட 2,800 கறுப்பு, வெள்ளைக் காட்சிகள்கொண்ட சுருள்களை அவர் உருவாக்கினார்.
சிறு பிள்ளையாக நாட்டைவிட்டுச் சென்று பெரியவரான பின்னர் திரும்பியதால் டான் பல மாற்றங்களைக் கண்டார். காலப்போக்கில் இன்னும் பல்வேறு மாற்றங்களை நினைவுகளாக மாற்றின டானின் நிழற்படக் கருவி.
டானின் கண்காட்சியையும் சேர்த்து வெவ்வேறு இடங்களில் மொத்தம் ஏழு கண்காட்சிகள் நடைபெறுகின்றன.
அடுத்த ஆண்டு ஜனவரி 31ஆம் தேதிவரை பொதுமக்கள் அவற்றைக் காண முடியும். ஒருசில கண்காட்சிகளுக்கு அனுமதி இலவசம்.
மேல் விவரங்களுக்கு https://sipf.sg/ என்ற இணையப்பக்கத்தை நாடலாம்.
