பெக் கியோ வீடமைப்பு வளர்ச்சிக் கழக கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) பழுதடைந்த குழாய் ஒன்றினால் சில வீடுகளில் ஏழு மணி நேரத்துக்கும் மேற்பட்ட தண்ணீர் விநியோகத் தடை ஏற்பட்டது.
குழாய்களை இணைக்கும் பகுதி வெடித்து உடைந்ததே அதற்கான காரணம் என்று தஞ்சோங் பகார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆல்வின் டான் சம்பவம் குறித்து விளக்கம் அளித்தார்.
அன்றைய தினம் காலை 5.30 மணியளவில், புளோக் 40 கேம்பிரிட்ஜ் ரோட்டில் உள்ள வீவக கட்டடத்தின் இரண்டு முதல் ஐந்தாம் மாடியில் உள்ள வீடுகளில் தண்ணீர் விநியோகம் தடைப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் அவரது ஃபேஸ்புக்கில் வெளியிட்ட பதிவில் இந்த விவரங்கள் வெளியிடப்பட்டன.
அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளை நிர்வகிக்கும் தங்சோங் பகார் நகரமன்றத்தின் பேச்சாளர் தேய்மானம் காரணமாக குழாய் இணைப்பு விலகியதே இந்தக் குழாய் வெடிப்புக்குக் காரணம் என்று தெரிவித்தார்.
சீரமைப்புப் பணிகளுக்காகத் தண்ணீர் விநியோகம் செயற்கையாக காலை 7.30 மணிமுதல் நண்பகல் கடந்து 12.45 மணிவரை நிறுத்திவைக்கப்பட்டது. பணிகள் நிறைவடைந்த பிறகு விநியோகம் வழக்கத்துக்குத் திரும்பியது.
பொதுவெளிக் குழாய்களில் நீர் விநியோகம்
தடை ஏற்பட்ட நேரத்தில், பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்கள் இரண்டாம் மாடி முதல் ஐந்தாம் மாடிவரை இருந்த பொது வெளிக் குழாய்களில் தண்ணீரை எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் அடித்தளத் தலைவர்களுடன் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு நேரடியாகச் சென்று குடியிருப்பாளர்களைச் சந்தித்து குடிநீர் வழங்கினார். நகரமன்ற நிர்வாகக் குழுவும் சீரமைப்புப் பணிகள் நிறைவடையும் வரை அங்கு இருந்தனர்.

