சிங்கப்பூரின் எஃப்-15 ரகப் போர் விமானங்களை அமெரிக்காவின் குவாம் தீவில் நிறுத்திவைக்கும் திட்டம் கைவிடப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படையின் தேவைகளை மறுஆய்வு செய்த பிறகு அந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தற்காப்பு அமைச்சு செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 12) தெரிவித்தது.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விக்குப் பதில் தந்த அமைச்சு அமெரிக்கத் தற்காப்பு அமைச்சுடன் அதன் தொடர்பில் இணக்கத்தை எட்டியதாகக் கூறியது.
இருப்பினும், குவாமில் சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படையின் குறுகியகாலப் பயிற்சிகள் தொடரும் என்றும் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் அங்குப் போர் விமானங்கள் பயிற்சியில் ஈடுபடும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அர்க்கன்சா மாநிலத்தின் ஃபோர்ட் ஸ்மித் நகரில் எபிங் தேசிய ஆகாயப் பாதுகாவல் தளத்தில் புதிய போர் விமானங்களைப் பயிற்சியில் ஈடுபடுத்துவது குறித்து அமெரிக்காவுடன் சிங்கப்பூர் பேசி வருகிறது.
எஃப்-15 போர் விமானங்களின் பயிற்சி ரத்துச் செய்யப்பட்டதை அமெரிக்க ஆகாயப் படை முன்னதாக அறிவித்தது. குவாம் ஊடகம் அந்தத் தகவலை வெளியிட்டது.
சிங்கப்பூர் விமானங்களும் அதிகாரிகளும் ஆகாயப் படைத் தளத்தில் இருப்பதாலும் புதிய உள்கட்டமைப்பை நிறுவுவதாலும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படக்கூடிய தாக்கம் மதிப்பீடு செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.
மேற்குப் பசிபிக் பெருங்கடற்பகுதியில் இருக்கிறது குவாம் தீவு. அதன் பரப்பளவு 550 சதுர கிலோமீட்டர். சான் பிரான்சிஸ்கோ நகரிலிருந்து கிட்டத்தட்ட 9,300 கிலோமீட்டர் தொலைவில் அது உள்ளது. சிங்கப்பூரிலிருந்து குவாம் தீவு ஏறக்குறைய 4,700 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
இதற்கு முன்னர் 2017, 2019, 2021, 2023ஆம் ஆண்டுகளில் சிங்கப்பூர் ஆகாயப் படையின் எஃப்-15 போர் விமானங்களும் மற்ற விமானங்களும் குறுகியகாலத்திற்குப் பயிற்சிகளில் ஈடுபட்டிருந்தன.
ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தற்காப்பு அமைச்சு, சிங்கப்பூருக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் மிகச் சிறந்த, நீண்டகாலத் தற்காப்பு உறவு நிலவுவதாகக் கூறியது.
அமெரிக்காவில் சிங்கப்பூர் ஆகாயப் படை தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொள்வதற்கு வாஷிங்டன் தொடர்ந்து அளித்துவரும் ஆதரவுக்குத் தற்காப்பு அமைச்சு நன்றி தெரிவித்துக்கொண்டது. அத்தகைய பயிற்சிகள் ஆகாயப் படையின் செயல்முறை ஆற்றல்களை வலுப்படுத்திக்கொள்ள உதவியாக இருக்கும் என்றும் அமைச்சு குறிப்பிட்டது.