நாட்பட்ட சிறுநீரக நோய்க்கான சிகிச்சையுடன் அந்திமகாலச் சேவையை ஒருங்கிணைக்கும் திட்டம்

நாட்பட்ட சிறுநீரக நோய்க்கான சிகிச்சையுடன் அந்திமகாலச் சேவையை ஒருங்கிணைக்கும் திட்டம்

2 mins read
a5c14e09-9575-4bb1-aeb7-94b8e0190d6e
‘ரெனல்சான்ஸ்’ திட்டத்தின்கீழ் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனை, சிங்கப்பூர் பொது மருத்துவமனை, டான் டோக் செங் மருத்துவமனை மற்றும் தேசிய சிறுநீரக அறநிறுவனம் ஆகிய அமைப்புகள் வழியாக நான்கு ஆண்டுகளில் 5,260க்கும் அதிகமான நோயாளிகள் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் தேசிய சிறுநீரக அறநிறுவனமும் நாட்டின் மூன்று முக்கியப் பொது மருத்துவமனைகளும் இணைந்து, முற்றிய நிலை, நாட்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்திமகாலப் பராமரிப்புச் சேவையை வழங்குவதற்கான $9 மில்லியன் மதிப்பிலான நான்கு ஆண்டு முன்னோடித் திட்டம் ஒன்றைத் தொடங்கியுள்ளன.

லியன் அறநிறுவனத்தின் ஆதரவுடன் ‘ரெனல்சான்ஸ்’ என்ற பெயரில் இச்செயல்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டால் ரத்தச் சுத்திகரிப்பு மட்டுமே ஒரே தீர்வு என்ற எண்ணத்தை மாற்றி, ஆரம்பக் கட்டத்திலேயே இந்த அந்திமகாலப் பராமரிப்பை மருத்துவச் சிகிச்சையுடன் ஒருங்கிணைப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இதன் மூலம் நோயாளிகளுக்கு ஏற்படும் வலி, பக்கவிளைவுகள், மன அழுத்தம் ஆகியவை குறைக்கப்படும். இத்திட்டத்தின்கீழ் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனை, சிங்கப்பூர் பொது மருத்துவமனை, டான் டோக் செங் மருத்துவமனை மற்றும் தேசிய சிறுநீரக அறநிறுவனம் ஆகிய அமைப்புகள் வழியாக நான்கு ஆண்டுகளில் 5,260க்கும் அதிகமான நோயாளிகள் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது சிங்கப்பூரர்களில் 14 விழுக்காட்டினர் நாட்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது உலகளாவிய சராசரியான 10 விழுக்காட்டைவிட அதிகமாகும். மூத்தோர் மற்றும் புற்றுநோய், இதய நோய் போன்ற கடுமையான பாதிப்புகள் உள்ளவர்களுக்கு ரத்தச் சுத்திகரிப்புச் சிகிச்சை சில நேரங்களில் ஆயுளை நீட்டிக்கப் பெரிதும் உதவுவதில்லை.

மாறாக, அது தலைவலி, தசைப்பிடிப்பு போன்ற பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே, புதிய திட்டத்தின்கீழ் தாதியருக்குச் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டு, நோயாளிகள் இறுதி நிலையை எட்டுவதற்கு முன்பாகவே அவர்களது உணர்வுபூர்வமான நல்வாழ்வு மற்றும் இதர மருத்துவத் தெரிவுகள் குறித்து முன்கூட்டியே ஆலோசனைகள் வழங்கப்படும்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்