தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனையின் (என்யுஎச்) மருந்தகங்களில் மருந்துகளைப் பெற்றுக்கொள்ள வரும் நோயாளிகளும் பொதுமக்களும் வரும் நவம்பர் மாதம் முதல் தங்களது சொந்தப் பைகளைக் கொண்டுவர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இனி அங்கு பிளாஸ்டிக் பைகள் வழங்கப்பட மாட்டா என்று மருத்துவமனை நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. சுற்றுப்புற, நீடித்த நிலைத்தன்மைக்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, தங்களது மருந்தகங்களில் பிளாஸ்டிக் பைகள் வழக்கமாக வழங்கப்படவோ அல்லது விற்கப்படவோ மாட்டா என்று திங்கட்கிழமையன்று (அக்டோபர் 26) என்யுஎச் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தது.
எனவே, மருந்துகளை வாங்க மருந்தகங்களுக்கு வரும் அனைவரும் மறுபயனீட்டுப் பைகளை உடன் எடுத்து வருமாறு மருத்துவமனை ஊக்கப்படுத்தியுள்ளது. மருத்துவமனைக்கு வரும் வேளையில் மறுபயனீட்டுப் பைகளை வைத்திருக்காத பொதுமக்களின் பயன்பாட்டுக்காக, நன்கொடையாகப் பெறப்பட்ட பைகள் மருந்தகங்களுக்கு வெளியே உள்ள அடுக்குகளில் வைக்கப்படலாம். இவை முதன்மைக் கட்டடம், மருத்துவ மையம், கென்ட் ரிட்ஜ் பிரிவு ஆகியவற்றில் கிடைக்கக்கூடும் என்றாலும், இருப்பைப் பொறுத்தே அவை வழங்கப்படும்.
மேலும், பை தேவைப்படும் நோயாளிகளோ அல்லது பொதுமக்களோ, என்யுஎச் வளாகத்தினுள் செயல்படும் ‘ஹெல்த் அண்ட் யூ’ சில்லறை மருந்து விற்பனை நிலையங்களில் மறுபயனீட்டுப் பைகளை வாங்கிக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“பசுமையான, கூடுதல் நீடித்த நிலைத்தன்மைமிக்க எதிர்காலத்தை நோக்கி ஒவ்வொரு சிறிய படியாக எடுத்துவைத்து, மாற்றத்தை ஏற்படுத்த உதவியதற்கு நன்றி,” என்று என்யுஎச் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளது.
மருத்துவமனையின் இணையத்தளத் தகவலின்படி, மருந்தகங்களில் சிறிய அளவிலான பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டைப் படிப்படியாகக் குறைத்ததன் மூலம் என்யுஎச் பிளாஸ்டிக் பயன்பாட்டை 50 விழுக்காட்டுக்கும் மேலாகக் குறைத்துள்ளது.
அத்துடன், ஊழியர்களின் குப்பைத் தொட்டிகளுக்கு பிளாஸ்டிக் பைகள் வழங்குவதையும் அது நிறுத்தியுள்ளது. இதன் மூலம் ஆண்டுதோறும் ஏறத்தாழ 200,000 பிளாஸ்டிக் பைகள் மிச்சப்படுகின்றன.
