சொகுசுப் படகு-கப்பல் மோதல்: காணாமற்போன ஆடவரின் உடல் கண்டெடுப்பு

சொகுசுப் படகு-கப்பல் மோதல்: காணாமற்போன ஆடவரின் உடல் கண்டெடுப்பு

கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

05 Apr 2026 - 8:04 pm

1 mins read

தென் தீவுகளுக்கு அருகே படகு விபத்து நிகழ்ந்ததைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 27ஆம் தேதியிலிருந்து காணாமற்போன ஆடவரின் உடல் இந்தோனீசிய நீர்ப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்தோனீசியாவின் காரிமுன் பகுதிக்கு அருகே ஒருவரின் உடல் கடலில் மிதந்துகொண்டிருந்ததை அந்நாட்டு அதிகாரிகள் மார்ச் 30ஆம் தேதி பிற்பகல் மூன்று மணியளவில் தங்களிடம் தெரியப்படுத்தியதாக சிங்கப்பூர் காவல்துறை ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 5) கூறியது. உயிரிழந்த ஆடவர், மார்ச் 27ஆம் தேதி அதிகாலை சுமார் 4.15 மணிக்குக் கப்பல் ஒன்றுடன் மோதிய சொகுசுப் படகில் இருந்த மூவரில் ஒருவர் என்று நம்பப்படுகிறது.

கப்பலைக் கவனமின்றி ஓட்டியதாக 49 வயது ஆடவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்தது.

சொகுசுப் படகில் இருந்த எஞ்சிய இருவர் விபத்து நிகழ்ந்த அன்றே மீட்கப்பட்டதாகவும் அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையம் கூறியது. கப்பலில் இருந்த அனைவரும் கணக்கெடுக்கப்பட்டனர் அவர்களில் யாரும் காயமடைந்ததாகத் தகவல் இல்லை என்றும் ஆணையம் குறிப்பிட்டது.

சம்பந்தப்பட்ட சொகுசுப் படகு மூழ்கியது. அது மார்ச் 30ஆம் தேதி மீட்கப்பட்டது.

காவல்துறை விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்கடல்இந்தோனீசியாவிபத்துபடகுகப்பல்