சொகுசுப் படகு-கப்பல் மோதல்; ஒருவரைக் காணவில்லை

சொகுசுப் படகு-கப்பல் மோதல்; ஒருவரைக் காணவில்லை

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

28 Mar 2026 - 11:25 am

1 mins read

தென் தீவுகளுக்கு அருகே வெள்ளிக்கிழமை (மார்ச் 27) காலை ஒரு சொகுசுப் படகும் (pleasure craft) விநியோகக் கப்பலும் மோதிக்கொண்டதில் ஒருவரைக் காணவில்லை.

அந்த நபருக்கான தேடல், மீட்புப் பணிகள் தொடர்கின்றன.

காணாமற்போனவர் சொகுசுப் படகில் இருந்த மூவரில் ஒருவராவார். அப்படகு வெள்ளிக்கிழமை அதிகாலை 4.15 மணியளவில் விநியோகக் கப்பலுடன் மோதியதாக சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையம் அன்றைய தினமே ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கை மூலம் தெரிவித்தது.

“சொகுசுப் படகில் இருந்த மூவரில் இருவர் மீட்கப்பட்டு பாதுகாப்பாக இருக்கின்றனர். ஒருவரைக் காணவில்லை,” என்று ஆணையம் கூறியது.

விநியோகக் கப்பலில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக இருந்தது உறுதிப்படுத்தப்பட்டது என்றும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையம் தெரிவித்தது.

சுற்றுக்காவல் படகுகள் உள்ளிட்டவற்றைப் பணியில் ஈடுபடுத்தியுள்ளதாக ஆணையம் சொன்னது. காணாமற்போனவரின் குடும்பத்தினருடன் தாங்கள் தொடர்பில் இருப்பதாகவும் அவருக்குத் தேவையான ஆதரவை வழங்கி வருவதாகவும் ஆணையம் குறிப்பிட்டது.

இந்த விவகாரம் தொடர்பில் கண்காணிக்குமாறு அப்பகுதியில் உள்ள கப்பல்களுக்குத் தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்கப்பல்படகுவிபத்துகாணவில்லை