அமெரிக்காவுடன் உறவை வலுப்படுத்துவதில் உறுதி: பிரதமர் வோங்

1 mins read
c5afcf42-5ffb-4cfe-bb7a-19b926142fbb
இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவில் சிங்கப்பூர் செய்தியாளர்களிடம் பேசும் பிரதமர் லாரன்ஸ் வோங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஜகார்த்தா: அமெரிக்க அதிபராகத் தேர்வுசெய்யப்பட்டுள்ள டோனல்ட் டிரம்ப்புடன் பணியாற்றவும் அமெரிக்காவுடன் மேம்பட்ட இருதரப்பு, வட்டார ஒத்துழைப்பை நாடவும் சிங்கப்பூர் விரும்புவதாக பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.

அதிபர் தேர்தலில் வெல்லத் தேவையான 270 தேர்வாளர் குழு (electoral college) வாக்குகளை டிரம்ப் பெற்றுவிட்டதாக ஊடகத் தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து சிங்கப்பூர் ஊடகங்களிடம் பேசிய பிரதமர் வோங், டிரம்ப்புடனும் அவரது குழுவுடனும் ஒத்துழைப்பு அம்சங்களை விரிவுப்படுத்துவதில் சிங்கப்பூர் விரும்புவதாகக் கூறினார்.

“அவர்களுடன் சேர்ந்து பணியாற்றி, இருதரப்பு உறவை வலுப்படுத்தி, ஆசிய பசிபிக் வட்டாரத்தில் அமெரிக்காவின் பங்காளித்துவ உறவை மேம்படுத்துவதை நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்று பிரதமர் வோங் புதன்கிழமை (நவம்பர் 6) சொன்னார்.

டிரம்ப்புக்கும் துணை அதிபராகத் தேர்வுசெய்யப்படவுள்ள ஜே.டி.வேன்சுக்கும் பிரதமர் வோங் புதன்கிழமை வாழ்த்துக் கடிதங்களையும் எழுதினார்.

அமெரிக்காவின் 47வது அதிபராகத் தேர்வுசெய்யப்பட்டுள்ள டிரம்ப்புக்கு வாழ்த்து கூறிய பிரதமர் வோங், அவருக்கு நல்ல ஆரோக்கியமும் வெற்றியும் கிடைக்க வாழ்த்தினார்.

“நீங்கள் ஆட்சியமைக்க அமெரிக்க மக்கள் உங்களுக்குப் பேராதரவு தந்துள்ளனர். அமெரிக்காவை மீண்டும் வழிநடத்த அவர்கள் உங்கள்மீது நம்பிக்கை வைத்துள்ளனர். உங்களது தலைமைத்துவத்தின்கீழ், அமெரிக்கா தொடர்ந்து வளர்ச்சியடைந்து அதன் உலகளாவிய தலைமைத்துவப் பங்கை ஆற்றும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது,” என்றார் பிரதமர் வோங்.

திரு வேன்சையும் வாழ்த்திய பிரதமர் வோங், இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இரு தலைவர்களுடனும் சேர்ந்து பணியாற்ற தாம் எதிர்பார்த்திருப்பதாகச் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்