பிரதமர் லாரன்ஸ் வோங், மே 21ஆம் தேதி பேங்காக்கின் சுவர்ணபூமி அனைத்துலக விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறங்கிய எஸ்கியூ321 விமானத்திற்கு உதவி செய்ததன் தொடர்பில் தாய்லாந்து அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார்.
தாய்லாந்துப் பிரதமர் ஸ்ரெத்தா தவிசினை மே 28ஆம் தேதி காலை தொலைபேசியில் அழைத்துத் தமது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்ததாகப் பிரதமர் வோங் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
தாய்லாந்து அதிகாரிகள் அந்த விமானத்தின் பயணிகளையும் சிப்பந்திகளையும் விமானத்திலிருந்து வெளியேற்ற உதவியதற்கும் காயமடைந்தோர்க்கு மருத்துவப் பராமரிப்பு வழங்கியதற்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
தாம் பிரதமர் பதவியேற்றதற்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியதற்கும் தாய்லாந்துப் பிரதமர் ஸ்ரெத்தாவிற்கு நன்றி கூறியதாகத் திரு வோங் குறிப்பிட்டார்.
சிங்கப்பூருக்கும் தாய்லாந்துக்கும் இடையில் நட்பார்ந்த நல்லுறவு நிலவுவதாக அவர் கூறினார். இரு நாடுகளுக்கும் இடையில் விரிவான பொருளியல் தொடர்புகள் இருப்பதையும் தலைவர்கள் நிலையிலும் மக்கள் நிலையிலும் தொடர்புகள் இருப்பதையும் அவர் சுட்டினார்.
சிங்கப்பூருக்கும் தாய்லாந்திற்கும் இடையில் அரசதந்திர உறவுகள் தொடங்கி அடுத்த ஆண்டுடன் (2025) 60 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், இருதரப்பு, வட்டார ஒத்துழைப்பை மேம்படுத்த தாய்லாந்துப் பிரதமருடன் அணுக்கமாக ஒத்துழைக்கத் தாம் விரும்புவதாகப் பிரதமர் வோங் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

