தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிரதமர் வோங் ஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்குப் பயணம்

2 mins read
ed705a99-70a9-4859-9691-41f3dd9bd72e
ஆஸ்திரேலியாவின் ஏபிசி நியூஸ் ஊடகத்துக்கு நேர்காணல் அளித்த பிரதமர் லாரன்ஸ் வோங். - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

பிரதமர் லாரன்ஸ் வோங், திங்கட்கிழமை முதல் வரும் சனிக்கிழமை வரை (அக்டோபர் 6 - 11) வரை ஆஸ்திரேலியாவுக்கும் நியூசிலாந்துக்கும் அதிகாரத்துவப் பயணம் மேற்கொள்கிறார்.

இதுவே திரு வோங், பிரதமராக அவ்விரு நாடுகளுக்கும் மேற்கொள்ளும் முதல் அதிகாரத்துவப் பயணமாகும்.

சிங்கப்பூருக்கும் அவ்விரு நாடுகளுக்கும் இடையில் 60 ஆண்டுகளாக அரசதந்திர உறவு நிலவுவதைக் கொண்டாடும் வேளையில் திரு வோங்கின் பயணம் அமைகிறது.

சிங்கப்பூர், ஆஸ்திரேலியாவுடனும் நியூசிலாந்துடனும் கொண்டுள்ள சிறப்பான இருதரப்பு உறவைப் பிரதமர் வோங்கின் பயணம் மறுவுறுதிப்படுத்தும் என்று பிரதமர் அலுவலகம் திங்கட்கிழமை அறிக்கையில் குறிப்பிட்டது.

திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை (அக்டோபர் 9) வரை திரு வோங் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரிலும் அந்நாட்டின் தலைநகர் கேன்பெராவிலும் இருப்பார். பிறகு வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை வரை நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் இருப்பார்.

கேன்பெராவில் திரு வோங்கும் ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்டனி அல்பனீசும் 10வது சிங்கப்பூர்-ஆஸ்திரேலியா தலைவர்கள் சந்திப்பை நடத்துவர். பின்னர் இரு தலைவர்களும் மேம்பட்ட சிங்கப்பூர்-ஆஸ்திரேலிய உத்திபூர்வ பங்காளித்துவத்தைத் தொடங்க வகைசெய்யும் உத்தரவு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவர்.

இந்த பங்காளித்துவம் சிஎஸ்பி 2.0 என்றழைக்கப்படுகிறது.

கடந்த 2015ஆம் அண்டில் சிங்கப்பூரும் ஆஸ்திரேலியாவும் தங்களுக்கிடையிலான உறவை மேம்படுத்திக்கொண்டன. அதுவே சிங்கப்பூர் செய்துகொண்ட முதல் சிஎஸ்பி பங்காளித்துவம் ஆகும்.

ஒருசில நாடுகளுடன் மட்டும்தான் சிங்கப்பூர் அந்த பங்காளித்துவத்தை வைத்துக்கொண்டிருக்கிறது. சிஎஸ்பி, பல்வேறு துறைகளுக்கான இருதரப்பு ஒத்துழைப்பு அம்சங்களை உள்ளடக்கும்.

ஆக்லாந்தில் திரு வோங், அவருடன் செல்லும் பேராளர்க் குழுவுடன் நியூசிலாந்துப் பிரதமர் கிறிஸ்டஃபர் லுக்சோனைச் சந்திப்பார். பிறகு சிங்கப்பூர்-நியூசிலாந்து சிஎஸ்பி ஒப்பந்தம் கையெழுத்தாகும்.

தற்போது சிங்கப்பூருக்கும் நியூசிலாந்துக்கும் இடையே மேம்படுத்தப்பட்ட பங்காளித்துவ (Enhanced Partnership) ஒப்பந்தம் நடப்பில் உள்ளது. சிஎஸ்பி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதன் மூலம் இரு நாடுகளும் தங்களுக்கிடையிலான உறவை மேம்படுத்திக்கொள்ளும்.

சிங்கப்பூரின் 60ஆம் ஆண்டு சுதந்திர தினத்தைக் கொண்டாட கேன்பெராவிலும் ஆக்லாந்திலும் நடைபெறும் விருந்து நிகழ்ச்சிகளில் வெளிநாடு வாழ் சிங்கப்பூரர்களைப் பிரதமர் வோங் சந்திப்பார்.

திரு வோங் திங்கட்கிழமையன்று ஆஸ்திரேலியாவின் ஏபிசி நியூஸ் ஊடகத்துக்கு நேர்காணல் அளித்தார். அதில் அவர், சிங்கப்பூரும் ஆஸ்திரேலியாவும் ஒரே வகையான உத்திபூர்வ கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளதாகச் சொன்னார். பாதுகாப்பு, தடையற்ற வர்த்தகம் உள்ளிட்ட அம்சங்கள் அதில் அடங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்