கடந்த 2014 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில், பிஎம்இடி எனப்படும் நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பர்கள் பிரிவினரின் எண்ணிக்கையில் ஏற்பட்ட அதிகரிப்பில் கிட்டத்தட்ட மூவரில் இருவர், அதாவது 63 விழுக்காட்டினர் உள்ளூரில் பிறந்த சிங்கப்பூரர்கள்.
அக்காலகட்டத்தில் அவ்வகைப் பிரிவினரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 382,000. அப்பிரிவைச் சேர்ந்த, வெளிநாட்டில் பிறந்து சிங்கப்பூர்க் குடியுரிமை பெற்றவர்கள், நிரந்தரவாசிகளில் பலர் இங்கேயே பிறந்து வளர்ந்த சிங்கப்பூரர்களைத் திருமணம் செய்துகொண்டனர்.
இந்தப் புள்ளிவிவரங்களை மனிதவள அமைச்சர் டான் சீ லெங் வெள்ளிக்கிழமை (மார்ச் 7) நாடாளுமன்றத்தில் வெளியிட்டார்.
மனிதவள அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது, தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் லியோங் மன் வாய் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோது அவர் இவ்விவரங்களைப் பகிர்ந்துகொண்டார்.
“சிங்கப்பூர் பெரும்பாலும் குடியேறி நாடு என்பதால் ‘நமக்கு எதிராக அவர்கள்’ என்பதையே தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கக்கூடாது என்று உண்மையிலேயே நான் நம்புகிறேன். இந்நாட்டை நேசிப்பதால்தான் நாம் அனைவரும் இங்கு இருக்கிறோம்,” என்றார் திரு டான்.
வேலை அனுமதி அட்டையில் இருந்து, பின்னர் நிரந்தரவாசத் தகுதிபெற்றோரால் ‘பிஎம்இடி’ பிரிவைச் சேர்ந்த சிங்கப்பூர்வாசிகளிடம் ஏற்பட்ட நிலைமாற்றம் குறித்து திரு லியோங் கேள்வியெழுப்பினார்.
இவ்விவகாரத்தைத் தெளிவுபடுத்த மற்ற புள்ளிவிவரங்களையும் வெளிப்படையாக ஆராயத் தயாராக இருப்பதாக டாக்டர் டான் தெரிவித்தார்.
ஆயினும், வெளிநாட்டில் பிறந்த சிங்கப்பூர்க் குடிமக்கள், உள்ளூரில் பிறந்த சிங்கப்பூர்க் குடிமக்கள் இடையிலான பிரிவினை குறித்து திரு லியோங் தொடர்ந்து பேசிவருவதாக அவர் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
“என் தந்தையார், திரு லியோங்கின் தந்தையாரும்கூட, உள்ளூரில் பிறந்த சிங்கப்பூர்க் குடிமக்கள் இல்லை என உறுதியாகக் கூறுகிறேன். இங்கிருப்பதால் திரு லியோங்கைப் போன்றே நானும் நன்மை அடைந்திருக்கிறேன். நாங்கள் இருவருமே எங்களால் முடிந்த அளவிற்கு நம் நாட்டிற்குச் சேவையாற்ற விரும்புகிறோம்,” என்று அவர் சொன்னார்.
திரு லியோங்கின் தனிப்பட்ட இணையத்தளத் தகவல்படி, அவருடைய தந்தையார் சீனாவின் குவாங்டோங் மாநிலத்திலிருந்து 1949ஆம் ஆண்டு சிங்கப்பூருக்குக் குடிபெயர்ந்தார்.

