எல்லைகள் மனிதர்களைப் பிரிக்கின்றன; பாலங்கள் அவர்களை இணைக்கின்றன எனும் உன்னதக் கருத்தை இவ்வாண்டின் சிங்கப்பூர் கவிதை விழா முன்னிறுத்தியது.
சிங்கப்பூரர்களிடையே கவிதை மீதான ஆர்வத்தை வளர்ப்பதும் கவிஞர்கள் தங்கள் படைப்புகளைப் பகிர ஒரு தளத்தை உருவாக்குவதும் 12வது ஆண்டாக நடைபெற்ற இவ்விழாவின் நோக்கம்.
உணர்வுகளை வெளிப்படுத்தும் தளமாக இருப்பதுடன், வேறுபாடுகள் குறித்த கலந்துரையாடல்களுக்கு வழிவகுத்து, புரிதலுக்கான பாலங்களை அமைக்கக்கூடிய நல்லதொரு கருவி கவிதை என்பதை ‘எல்லைகளும் பாலங்களும்’ எனும் கருப்பொருளுடன் ஜூலை 24 முதல் ஜூலை 26ஆம் தேதி வரை நடைபெற்ற சிங்கப்பூர் கவிதை விழா எடுத்துக்காட்டியது.
மொழி, பண்பாடு, தலைமுறை, அடையாளம் என மனிதர்களைச் சுற்றிலும் உள்ள பல்வேறு எல்லைகள் எவ்வாறு உருவாகின்றன என்பதையும் அவற்றைக் கடந்து உறவுகளிடையே புரிதலை எவ்வாறு வலுப்படுத்தவது என்பதையும் உணர்த்தும் வகையில் இந்த ஆண்டு கவிதை விழாவின் கவிதைப் பயிலரங்கு, வாசிப்பு, உரையாடல், போட்டி எனப் பல்வேறுபட்ட 23 நிகழ்ச்சிகளும் அமைந்தன.
“நிலையற்ற உலகச் சூழலில், அரசியல், கலாசாரம், தலைமுறை, உளவியல் ரீதியாக பலவிதமான பிரிவினைகள் உள்ளன. இத்தகைய எல்லைகளைக் கடந்து, ஓர் எல்லையின் மறுமுனையில் இருக்கும் ஒருவரின் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ள கவிதைகள் பாதை அமைத்துக்கொடுக்கின்றன,” என்று கல்விக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் டாக்டர் சையத் ஹருன் அல்ஹப்ஷி சுட்டினார்.
தேசிய நூலக வாரியத்தில் ஜூலை 24ஆம் தேதி நடந்த தொடக்க விழாவில் டாக்டர் சையத் ஹருன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றினார்.
கலாசாரப் பதக்கம் பெற்ற நாட்டின் மூத்த கவிஞர் வோங் யூன் வா, தொடக்க விழாவில் நன்யாங் கவிதை பற்றியும் மொழிபெயர்ப்பு குறித்தும் சிறப்புரை ஆற்றினார்.
மேற்கத்திய இசையில் தமிழ்க் கவிதை
தேசிய நூலகத்தில் ஜூலை 25ஆம் தேதி நடைபெற்ற தமிழ்க் கவிதை நிகழ்ச்சியில் 18 முதல் 35 வயதுக்குட்பட்ட 10 இளம் கவிஞர்கள் ‘எல்லைகளும் பாலங்களும்’ என்ற கருப்பொருளில் கவிதைகளை எழுதிப் படைத்தனர்.
பிலிப்பீன்ஸின் புகழ்பெற்ற ‘மெகோசோனோ ஆர்க்கெஸ்ட்ரா’ இசைக்குழுவினர் கவிதைகளுக்கு இசை மீட்டினர். இடையிடையே இடம்பெற்ற குழுவின் தனி இசை, இசையும் இலக்கியமும் சங்கமித்த இனிய பொழுதுக்கு இன்பம் சேர்த்தது.
கவிஞர் நெப்போலியன் இசைக்குழுவையும் கவிதை படைத்தோரையும் ஒருங்கிணைத்து நிகழ்ச்சியைப் படைத்தார்.
மனிதர்களைப் பிரிக்கும் எல்லைகள் பல இருந்தாலும் அவற்றைக் கடந்து அனைவரையும் ஒன்றிணைக்கும் பாலமாக மனிதநேயம் திகழ்கிறது என்ற கருத்து இளையர்களின் கவிதைகளில் ஒருமித்த குரலாக ஒலித்தது.
மாண்டரினில் கவிதை படைத்த ரோஷிணி
சிங்கப்பூர் கவிதை விழா அமைப்பும் சின் சான் இலக்கியச் சங்கமும் இணைந்து படைத்த பல மொழியினரும் பங்கேற்ற ‘எல்லைகளும் எல்லைகளைக் கடத்தலும்’ நிகழ்ச்சி ஜூலை 26ஆம் தேதி நடைபெற்றது. காலை முதல் மாலை வரை இடம்பெற்ற அந்நிகழ்வில், 5 முதல் 92 வயது வரையிலான நூற்றுக்கும் மேற்பட்ட படைப்பாளிகள் பங்கேற்றனர்.
சீனம், ஆங்கிலம், மலாய், தமிழ் ஆகிய நாட்டின் நான்கு அதிகாரபூர்வ மொழிகளின் கவிதை மரபுகளை ஒரே மேடையில் இணைத்தது அந்நிகழ்ச்சி. 1978ஆம் ஆண்டு நன்யாங் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுக்கு 48 ஆண்டுகளுக்குப் பின் இத்தகைய மாபெரும் பலமொழிச் சங்கமம் சாத்தியமாகியுள்ளது.
மூத்த கவிஞர் சோ ஜோங்கின் ‘சிங்கப்பூர் நதியும் நாமும்’ என்ற கவிதையை மாணவர்கள் வாசிக்க, நிகழ்ச்சி தொடங்கியது. தொடர்ந்து, வெவ்வேறு மொழிக் கவிஞர்கள் ஒருவரது கவிதையை மற்றொருவர் மொழிபெயர்த்து மேடையில் வாசித்ததுடன், இசை, தற்காப்புக் கலை, நடன நிகழ்ச்சிகளையும் படைத்தனர்.
தமிழின் செவ்வியல் கவிதையியல், சீன மொழியின் சந்தம், மலாய் மொழியின் பண்பாட்டு ஆழம், ஆங்கிலத்தின் நேரடி விவரிப்பு ஆகியவை இணைந்து மொழிகடந்த புரிதலை வெளிப்படுத்தின.
கவிதையைப் பாலமாகக்கொண்டு, சிங்கப்பூரின் இந்தத் தனித்துவமான பல மொழி இயக்கத்தை உலகளாவிய இலக்கிய உலகிற்கு எடுத்துச் செல்லும் முக்கியப் பண்பாட்டுச் சொத்தாக மாற்ற வேண்டும் என்பதே இவ்விழாவின் முதன்மை இலக்காகும்.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத் தேசியக் கல்விக் கழகத் தமிழ்ப் பிரிவின் தலைவர் இணைப் பேராசிரியர், முனைவர் சீதாலட்சுமி, பயிற்சி ஆசிரியர் சேகப்பன் சேவாள் இருவரும் தமிழில் கவிதைகள் படித்தனர்.
நிகழ்ச்சியின் நட்சத்திரப் படைப்பாளராக ‘ஹவுஸ் ஆன் தி ஹில்’ பாலர் பள்ளியில் பயிலும் 6 வயது ரோஷிணி ரோஹித் அனைவரையும் கவர்ந்தார். அவர் முனைவர் சீதாலட்சுமியின் மனிதர்கள் பலவிதம், சேவாளின் கொன்றைப் பூ ஆகிய கவிதைகளின் மாண்டரின் மொழிபெயர்ப்பை அழகுறப் படைத்துப் பாராட்டுகளைப் பெற்றார்.
தேசிய கவிதைப் போட்டி
ஈராண்டுகளுக்கு ஒருமுறை சிங்கப்பூர் கவிதை விழா நடத்தும் நான்கு மொழி கவிதைப் போட்டிகளில் இந்த ஆண்டு 191 பேர் பங்கேற்றனர். நான்கு மொழிகளிலும் சிறுவர், இளையர், பெரியோர் (18 வயதுக்கு மேற்பட்டோர்) என மூன்று பிரிவுகளாகப் போட்டி நடைபெற்றது.
தமிழ் மொழி, இளையர் பிரிவில் ஜெனிலா நெப்போலியன் தேவக்குமாரும் பெரியோர் பிரிவில் சங்கீதா கந்தசாமியும் முதல் பரிசு வென்றனர். அனைத்துப் பிரிவிலும் முதல் பரிசாக $300 புத்தகப் பற்றுச்சீட்டு அளிக்கப்பட்டது.


