பொருளியலில் மட்டுமின்றி, சமூக நீதியையும் பொதுச் சேவையையும் உயர்வாக மதிக்கும் சமூகத்தைக் கட்டமைக்க சிங்கப்பூர் பெரிதும் முயன்று வருகிறது என்றும் அது முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் போப் ஃபிரான்சிஸ் புகழாரம் சூட்டினார்.
மூன்று நாள் அதிகாரத்துவப் பயணமாக சிங்கப்பூர் வந்துள்ள திருத்தந்தை போப் ஃபிரான்சிஸ், வியாழக்கிழமை (செப்டம்பர் 12) சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகப் பண்பாட்டு நிலையத்தில் இத்தாலிய மொழியில் பொது உரையாற்றினார்.
சிங்கப்பூர் தமக்கு நல்கிய பெருவரவேற்புக்கு நன்றி கூறிய திருத்தந்தை போப், பொதுக் குடியிருப்புக் கொள்கைகள், உயர்தரம் வாய்ந்த கல்வி, ஆற்றல்மிக்க சுகாதார அமைப்பு ஆகியவற்றின் வாயிலாக சிங்கப்பூரர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த குடியரசு கொண்டிருக்கும் கடப்பாட்டை பாராட்டினார்.
இதன் வாயிலாக அனைத்து சிங்கப்பூரர்களும் முழுமையாகப் பயன்பெறும் வரை இந்த முயற்சிகள் தொடரும் என்று தாம் நம்புவதாகவும் போப் தெரிவித்தார். இன்று நாம் காணும் சிங்கப்பூருக்கு அடித்தளம் அமைத்த மூத்த குடிமக்களை மறவாது அவர்களின் நல்வாழ்வில் சிறப்புக் கவனம் அளிக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
காலை 8.30 மணியளவில் வத்திகன் நகரத் தலைவர் நாடாளுமன்றத்திற்கு காரில் சென்றுகொண்டிருந்தபோது, சாலையோரத்தில் திரளாகக் கூடியவாறு, கைதட்டியும் உற்சாகக் குரலெழுப்பியும் பொதுமக்கள் அவருக்குப் பெருவரவேற்பு அளித்தனர்.
நாடாளுமன்றத்தில் அதிபர் தர்மன் சண்முகரத்னத்தையும் சிங்கப்பூர் அமைச்சர்களையும் சந்தித்து சடங்குபூர்வ மரியாதையைப் ஏற்றுக்கொண்ட போப் ஃபிரான்சிஸ், பிறகு தேசிய பல்கலைக்கழகத்தின் கலாசார நிலைய அரங்கிற்குச் சென்று உரையாற்றினார்.
சிங்கப்பூரின் கதை, வளர்ச்சியையும் மீள்திறனையும் பற்றியது எனப் பாராட்டிய போப் ஃபிரான்சிஸ், எளிமையான நிலையிலிருந்து இந்நாடு கண்டுள்ள மேல்நிலை வளர்ச்சி தற்செயலானதன்று என்றும் அறிவுபூர்வமான முடிவுகளால் உருவானது என்றும் கூறினார்.
“மறைந்த பிரதமர் லீ குவான் யூ, இந்நாட்டின் அசுர வளர்ச்சி, உருமாற்றம் ஆகியவற்றிற்கு சீரிய உத்வேகம் அளித்தவர்,” என்று போப் ஃபிரான்சிஸ் புகழாரம் சூட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
நடைமுறைவாதத்தில் அல்லது தகுதியை அனைத்திற்கும் மேலாக வைப்பதில் மட்டும் கவனம் செலுத்துவதின் அபாயத்தைச் சுட்டிய போப் ஃபிரான்சிஸ், நலிவுற்றோரை ஆதரிப்பதற்கு இங்கு நடப்பில் உள்ள பல்வேறு கொள்கைகள், முயற்சிகளை வெகுவாகப் பாராட்டினார்.
நேசிப்பதற்கும் நேசிக்கப்படுவதற்கும் நாம் கற்கும் இடம் குடும்பம் என்று தெரிவித்த திருத்தந்தை போப், குடும்பங்களின் பங்களிப்பு, அதன் விழுமியங்கள், இன்றைய சூழலில் குடும்பங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் தமது உரையின்போது வலியுறுத்தினார்.
“தற்போதைய சமூக நிலைமைகளால், குடும்பங்களைக் கட்டியெழுப்பிய அடித்தளங்கள் சவாலுக்கு உள்ளாகின்றன. எனவே, உறுதியான, நலமான உறவுகளை எவ்வாறு உருவாக்குவது என்பது குறித்து இளையர்களுக்குக் கற்பிப்பதற்கு, வாழ்விற்கு அர்த்தத்தையும் வடிவத்தையும் தரும் விழுமியங்களைக் குடும்பங்கள் கைமாற்றுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்.
“இதன் தொடர்பில் பல்வேறு அமைப்புகள்மூலம் குடும்பங்களின் ஒற்றுமையை மேம்படுத்துவது, பாதுகாப்பது, ஆதரவு அளிப்பது ஆகியவை தொடர்பான முயற்சிகள் போற்றப்பட வேண்டும்,” என்று அவர் கேட்டுக்கொண்டார் போப் ஃபிரான்சிஸ்.