கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களின் தலைவராக போப் பதவியை வகிப்பவரும் சமயத்துக்கு அப்பாற்பட்ட சமாதானத் தூதராகப் பார்க்கப்படுபவருமான திருத்தந்தை போப் ஃபிரான்சிஸை வரவேற்க சிங்கப்பூர் தயாராகி வருகிறது.
செப்டம்பர் 11ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை சிங்கப்பூருக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொள்ளும் போப்பாண்டவர், மக்களுக்கான பொது உரை (State Address), திருப்பலி, தாதிமை இல்ல வருகை, சமயங்களுக்கு இடையிலான கலந்துரையாடல் உட்படப் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவிருக்கிறார்.
இந்நிலையில், போப் ஃபிரான்சிஸ் மேற்கொள்ளும் இந்தப் பயணம் சிங்கப்பூர் கத்தோலிக்க சமூகத்தினருக்கு எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அறிய முற்பட்டது தமிழ் முரசு.
தூய லூர்து அன்னை தேவாலயத்தின் தமிழ்ப் பாடகர் குழுத் தலைவர் அடால்ஃப் ஜான் துரைராஜ், இதற்கு முன்பு 1986ஆம் ஆண்டு அப்போதைய போப்பாண்டவர் இரண்டாம் ஜான் பால், சிங்கப்பூருக்கு வருகையளித்தபோது தேசிய விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தங்கள் குழு பங்கேற்றதை நினைவுகூர்ந்தார்.
“அப்போது எங்களில் பலர் இளையர்களாக இருந்தோம். போப் வருகை அப்போது இளம் தலைமுறையினருக்கு ஊக்கம் அளித்ததுபோலவே தற்போதும் இன்றைய இளம் தலைமுறையினருக்கு போப் ஃபிரான்சிஸின் வருகை ஊக்கம் அளிப்பதாகத் திகழும்,” என்றார் ஜான்.
உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் போர்கள் அனைத்தையும் முடிவுக்குக் கொண்டுவந்து, மக்கள் அனைவரும் நல்லிணக்கத்தோடு வாழ்வதன் தொடர்பில் போப்பாண்டவர் கொண்டுள்ள நிலைப்பாடு மறுஉறுதிப்படுத்தப்படும் என்று எண்ணுவதாக அவர் கூறினார்.
போப் ஆண்டவரின் சிங்கப்பூர் வருகை எதிர்பாராத வாய்ப்பு என்றும் இதைத் தங்கள் குடும்பத்தினர் நல்லாசியாகக் கருதுகின்றனர் என்றும் குறிப்பிட்டார் குமாரி தீனா லியோனாரா.
சிங்கப்பூர்த் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டக் கல்வி பயிலும் குமாரி தீனா, “சக மனிதர்களிடம் அன்பு, மன்னிக்கும் மனம், நன்றி உணர்வு, உண்மையோடு நடந்துகொள்ள வேண்டும் என்பதை போப்பின் வருகை உணர்த்தும் என எதிர்பார்க்கிறோம்,” என்றார்.
தொடர்புடைய செய்திகள்
மேலும், தீய வழிகளிலிருந்து விலகி, மற்றவர்களுக்குச் சிறந்த முன்மாதிரியாக வாழவும், ஏழைகளுக்குத் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்யவும், சமயக் கொள்கைகளை முழுமனத்துடன் மற்றவர்களிடம் பகிரவும் போப் ஆண்டவரின் போதனைகளும் அவரது பணிவும் தனக்கு வழிகாட்டும் என்றும் கருதுவதாக அவர் சொன்னார்.
“திருத்தந்தையின் வருகை திருப்பணியாளர்கள், சமயத் தலைவர்கள், மக்களுக்கு இடையிலான உறவுப்பாலத்தை வலிமையாக்குவதை உறுதிசெய்யும் என்பது என் எதிர்பார்ப்பு,” என்று கூறினார் மைக்கேல் சின்னப்பன், 46.
திருத்தந்தையின் வருகை தனக்கு மிகவும் மகிழ்ச்சிகரமான தருணமாய் இருக்கும் என்று உறுதியாக நம்புவதாகச் சொன்ன அவர், இது தன் வாழ்நாள் பாக்கியம் என்று பூரிப்புடன் சொன்னார்.
மேலும், போப்பாண்டவரின் வருகையும் நல்லாசியும் தன்னை மட்டுமன்றி அனைவரையும் நல்வழிப்படுத்தும் என முழுமையாக நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையே, போப் வருகையையொட்டி நடைபெறவிருக்கும் எந்த நிகழ்ச்சியிலும் தான் பங்கேற்காவிட்டாலும், பல்லின மக்களால் பெரிதும் மதிக்கப்படும் போப் ஃபிரான்சிஸ் தான் வசிக்கும் சிங்கப்பூருக்கு வருகிறார் என்பதே மிகவும் நல்ல செய்தி என்றார் திருவாட்டி ராணி. இவ்வருகை, சகோதரத்துவம் எனும் நற்பண்பைப் பேரளவில் மறுமலர்ச்சி அடையச் செய்யும் என்று நம்பிக்கை கொண்டுள்ளதாக அவர் சொன்னார்.
செப்டம்பர் 11ஆம் தேதி சிங்கப்பூருக்கு முதல்முறையாக வருகையளிக்கவுள்ளார் போப் ஃபிரான்சிஸ். அவரை வரவேற்க கத்தோலிக்க மறைமாவட்டம், திருச்சபைகள், மாணவர்கள், சமயத் தலைவர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் அயராது ஆயத்தமாகி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.