பெருவிரைவு ரயிலில் (எம்ஆர்டி) பயணம் செய்த ஒருவரின் கையடக்க மின்னூட்டி வெள்ளிக்கிழமை (மார்ச் 7) தீப்பிடித்துக்கொண்டது.
இச்சம்பவம் ராஃபிள்ஸ் பிளேஸ் நிலையத்தில் ரயிலுக்குள் நேர்ந்தது. வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணியளவில் ரயிலின் அவசரத் தொடர்பு விசை அழுத்தப்பட்டதாகவும் ரயில் நிலைய ஊழியர்கள் தீயணைப்பு தெளிப்பானைக் கொண்டு தீயை அணைத்தனர் என்றும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்கு எஸ்எம்ஆர்டி பதிலளித்தது.
சம்பந்தப்பட்ட ரயிலில் இருந்த அனைத்து 650 பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர் என்றும் யாரும் காயமடையவில்லை என்றும் ‘எஸ்எம்ஆர்டி டிரெய்ன்ஸ்’ தலைவர் லாம் ஷியாவ் கய் தெரிவித்தார். இப்பிரச்சினை விரைவில் தீர்க்கப்பட்டதாகவும் ரயில் சேவைகள் பாதிக்கப்படவில்லை என்றும் எஸ்எம்ஆர்டி குறிப்பிட்டது.
சியாவ்ஹோங்ஷு (Xiaohongshu) சமூக ஊடகத் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளியில் சம்பந்தப்பட்ட ரயில் பெட்டியிலிருந்து வெண்ணிற புகை வெளியானது தெரிந்தது. ரயில் நிலைய ஊழியர்கள் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டதும் காணப்பட்டது.
காணொளியைப் பதிவேற்றம் செய்த மாது, ஒரு கையடக்க மின்னூட்டி, ஒரு மின்சாரக் கம்பி (data cable) உள்ளிட்ட பொருள்களைத் தனது கைப்பையில் வைத்திருந்ததாகத் தெரிவித்தார். திருவாட்டி சென் என்று தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட அவர், அந்தக் கையடக்க மின்னூட்டியை சில காலமாகப் பயன்படுத்தவில்லை என்று குறிப்பிட்டார். தீ மூண்டவுடன் தனது கைப்பையை உடனடியாகத் தரையில் எறிந்துவிட்டதாக அவர் சொன்னார்.
மின்சாரக் கசிவு காரணத்தால் கையடக்க மின்னூட்டியில் தீ மூண்டது என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

