தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் கிழக்குக் கல்லூரி வளாகத்தில் கட்டடக்கலை, பொறியியல், கட்டுமானத்துறை ஆகியவற்றில் பயிலும் மாணவர்களுக்குப் புதிய பாவனைப் பயிற்சி வசதிகள் அமைத்துத் தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலையிடச் சூழலைப் புதிய பாவனைப் பயிற்சி வசதிகள் பிரதிபலிக்கும்.
2,000 சதுர மீட்டர் பரப்பளவில் பாவனைப் பயிற்சி வசதி அமைக்கப்படும்.
அதற்கு நீடித்த நிலைத்தன்மை கட்டமைக்கப்பட்ட சூழல் நிலையம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இத்தகைய வசதி கட்டப்படுவது இதுவே முதல்முறை. மாணவர்களின் மின்னிலக்க, தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்த பாவனைப் பயிற்சி உதவும் என்று செவ்வாய்க்கிழமையன்று (ஆகஸ்ட் 19) தொழில்நுட்பக் கல்விக் கழகம் தெரிவித்தது.
கட்டுமானப் பணிகளின்போது சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுவதைக் குறைக்க நீடித்த நிலைத்தன்மை அணுகுமுறை, தொழில்நுட்பம் ஆகியவற்றின் திசை நோக்கி கட்டமைக்கப்பட்ட சூழல் துறை செல்கிறது.
புதிய பயிற்சிக் கூடம் மின்தூக்கி, மின்படிகள் பாவனைப் பயிற்சி வசதிகளைக் கொண்டிருக்கும்.
இதன்மூலம் பாதுகாப்புமிக்க இடத்தில் மாணவர்களால் பயிற்சி செய்ய முடியும்.
ஒவ்வோர் ஆண்டும் கட்டமைக்கப்பட்ட சூழல் தொடர்பான துறைகளைச் சேர்ந்த 1,500க்கும் மேற்பட்ட மாணவர்கள் புதிய பயிற்சி வசதியின்கீழ் பயிற்சி செய்வர் என்று தொழில்நுட்பக் கல்விக் கழகம் தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
வேலை செய்துகொண்டே இயந்திரவியல், மின்னியல் மேற்பார்வை பட்டயக் கல்வி பயில்பவர்கள், சிவில் மற்றும் கட்டமைப்பு பொறியியலில் தொழில்நுட்பப் பொறியாளருக்கான பட்டயக் கல்வி பயில்பவர்கள், வசதிகள் நிர்வாகம் மற்றும் பொறியியல் துறையில் உயர் நைட்டெக் கல்வி பயில்பவர்கள் ஆகியோருடன் வேறு சில துறைகளைச் சேர்ந்த மாணவர்களும் புதிய பயிற்சி வசதிகளைப் பயன்படுத்துவர்.
புத்தாக்கமிக்க, நீடித்த நிலைத்தன்மையுடன் கட்டமைக்கப்பட்ட சூழல் துறைக்காக எதிர்காலத்துக்குத் தயாராக இருக்கும் ஊழியரணியை உருவாக்குவதே இலக்கு என்று தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் தலைமை நிர்வாகி லோ கா கெக் தெரிவித்தார்.