தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
மருத்துவச் செலவுகள் தொடர்பில் உதவிக்கரம் 

‘மெடிஷீல்டு லைஃப்’ திட்டத்தின்கீழ் துல்லிய மருத்துவச் சிகிச்சைகளும் சேர்க்கப்படும்

2 mins read
21792774-ae91-4873-9dac-c35f54d7cc2f
சிங்கப்பூர் எக்ஸ்போவில் நடைபெறும் 22வது சிங்கப்பூர் சுகாதார, உயிர்மருத்துவ மாநாட்டில் அக்டோபர் 10ஆம் தேதி உரையாற்றினார் அமைச்சர் ஓங் யி காங். - படம்: சாவ்பாவ்

துல்லிய மருத்துவம் சார்ந்த சிகிச்சைகள் இனி ‘மெடிஷீல்டு லைஃப்’ (Medishield Life) காப்புறுதித் திட்டத்தின்கீழ் உள்ளடக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் எக்ஸ்போவில் நடைபெறும் 22வது சிங்கப்பூர் சுகாதார, உயிர்மருத்துவ மாநாட்டில் அக்டோபர் 10ஆம் தேதி உரையாற்றிய அமைச்சர் ஓங், மரபணுதொகையியல், ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவு, மற்றும் நோய்த்தடுப்புச் சேவை ஆகியவற்றை வலிமைமிக்க அறிவியல் மற்றும் கொள்கைகளின் ஒருங்கிணைப்பு என்று குறிப்பிட்டார்.

மேற்கூறியவற்றில் சிங்கப்பூர் கவனம் செலுத்தினால், சுகாதாரப் பாதுகாப்பில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று நம்பிக்கை தெரிவித்த அமைச்சர் ஓங், வரலாற்றுப்பூர்வ தொழில்நுட்ப முன்னேற்றத்தின் கரையில் சுகாதாரப் பராமரிப்பு உள்ளதாக சொன்னார்.

சுகாதாரத்தில் மரபியல் தரவுகளின் முக்கியத்துவம் மற்றும் துல்லிய மருத்துவம் சார்ந்த சிகிச்சைகள் குறித்தும் உரையாற்றினார் அமைச்சர் ஓங்.

’தொழில்நுட்பம் சார்ந்த முன்னேற்றமும், அதிக விலை செலுத்தி கடும் நோய்களுக்கான  சிகிச்சை, மற்றும் நீடித்த வாழ்நாள் ஆகியவற்றை நாடுவதே சுகாதாரச் சேவையைப் பொறுத்தமட்டில்  புத்தாக்கம் என்று கருதப்படுவதாகக் கூறிய திரு ஓங், காலப்போக்கில் துல்லிய மருத்துவம் முன்னணி மருத்துவ நடைமுறையாக உருவாகும் என்று கூறினார்.

“எனவே, துல்லிய மருத்துவம் முக்கிய மருத்துவமாக இடம்வகிக்கும்போது, அதனை நீடித்த வகையில்  கைக்கொள்வதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். உதாரணத்திற்கு எதிர்காலத்தில் குறைவான தயாரிப்பு காலம், குறைந்த விலையில் துல்லிய மருத்துவம் சார்ந்த சிகிச்சைகளை மேம்படுத்தும் இலக்குடன், உள்ளூர் முதலீடுகள் செய்கிறோம்,” என்றார் திரு ஓங்.

இதன் தொடர்பில் மெடிஷீல்டு லைஃப் மன்றம் அதன் பரிந்துரைகளை வரும் வாரம் வெளியிடவுள்ளதாகக் கூறிய அமைச்சர், அங்கீகரிக்கப்பட்ட துல்லிய மருத்துவச் சிகிச்சைகளுக்கு மெடிஷீல்டு லைஃப் காப்புறுதியை விரிவுபடுத்துமாறு மன்றம் பரிந்துரைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சு கூறிய பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ள எண்ணுவதாகத் தெரிவித்த திரு ஓங், அவ்வகையில் அங்கீகரிக்கப்பட்ட துல்லிய மருத்துவச் சிகிச்சைகள் நிதியுதவிக் கட்டமைப்பிற்குள் இடம்பெறும் எனவும் இத்தகைய சிகிச்சைகள் மூலம் அனைத்து சிங்கப்பூரர்களும் பயனடைய இயலும் எனவும் தெரிவித்தார்.

மரபியல் ஒரு நபரின் முக்கிய உடலமைப்பு முறையை வரையறுக்கிறது என்ற அவர், அறிவியல் முன்னேற்றங்கள் மரபணுத் தகவல்களை எளிதாகவும் மலிவாகவும் பெறுவதற்கும், மரபணுக்களைக் கையாளுவதற்கும் சாத்தியமாக்கியுள்ளன என்றும் சுட்டினார். அதன் தொடர்பில் அமைச்சு இயற்றவிருக்கும் சட்டம் குறித்தும் உரையாற்றினார்.

“காப்புறுதியின் நோக்கத்தை நலிவுறச் செய்யும் வகையில் காப்புறுதியாளர்கள் மரபியல் சார்ந்த தகவல்களைக் காப்பீடுகளில் பயன்படுத்திட முடியும். எனவே மரபியல் மற்றும் மரபணு தொகையியல் பரிசோதனை தரவுகள் பயன்பாட்டினை நிர்வகித்தல் தொடர்பில் புதிய சட்டத்தைச்  சுகாதார அமைச்சு உருவாக்கி வருகிறது. 

“காப்புறுதி மற்றும் வேலைவாய்ப்பில் மரபணு சார்ந்த தகவல்களைப் பாரபட்சமாகப் பயன்படுத்துதல் போன்ற விரும்பத்தகாத விளைவுகளைத் தீர்ப்பது இதன் நோக்கம்,” என்றார் திரு ஓங். விரிவான ஆலோசனைகளுக்குப் பிறகு அடுத்த ஓரிரு ஆண்டுகளில் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்