சிங்கப்பூர் மற்றும் ஆசியா முழுவதும் அர்த்தமுள்ள நன்கொடைகளை மேம்படுத்தும் இலக்குடன் வடிவமைக்கப்பட்டுள்ள ‘இம்பேக்ட்எஸ்ஜி’ (ImpactSG) திட்டத்தை நிறுவினார் அதிபர் தர்மன் சண்முகரத்தினம்.
சிங்கப்பூர்த் தேசியக் கலைக்கூடத்தில் வியாழக்கிழமை (நவம்பர் 21) நடைபெற்ற நிகழ்வில் துவக்கம் கண்ட ‘இம்பேக்ட்எஸ்ஜி’ திட்டம், தனிநபர் மற்றும் அமைப்புகளிடம் அர்த்தம் நிறைந்த தாக்கத்தை ஏற்படுத்த உதவும் வகையில் அவர்களுக்கான நன்கொடைச் சூழலை அமைத்துத் தருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தனிப்பட்ட முயற்சியாகக் குறிப்பிடப்படும் இந்தத் திட்டம், நன்கொடை என்பது நிதியுதவி சார்ந்தது மட்டுமன்று, கொடையாளர்கள் அதைக் கடந்தும் பங்களிக்க முடியும் என்பதை வலியுறுத்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
“கொடையளிக்க உறுதி கூறுவோர் நிதி நன்கொடைகளுக்கு அப்பால் அவர்களின் நேரம், திறன், செல்வங்களை அளிப்பதன் வழியாக மேலும் சிறப்பாகச் செயல்பட ஊக்குவிக்கிறது,” என்று திட்டத்தின் செய்திக்குறிப்பு விவரித்தது.
சிங்கப்பூரின் பருவநிலைச் செயல்பாட்டுத் தூதரும், சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் முன்னைய நிர்வாக இயக்குநருரான திரு ரவி மேனன் ‘இம்பேக்ட்எஸ்ஜி’ இயக்குநர்கள் குழுவின் தலைவராக இருப்பார்.
தொடக்க நிகழ்வில் உரையாற்றிய திரு.மேனன், “நம்மால் அனைத்து வழிகளிலும் எல்லைகள் கடந்தும் கொடையளிக்க முடியும். சிங்கப்பூர் மற்றும் ஆசியாவில் நன்கொடைகளின் நுழைவாயிலாகத் திகழ்வது நம் நோக்கம். நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஈடுபாடுள்ள கொடையாளர் சமூகத்தைக் கட்டமைப்பதற்கு விழைகிறோம்,” என்றார்.
நன்கொடை தருவது நமது கலாசாரத்திலேயே உள்ளது என்று தெரிவித்த திரு மேனன், “தேவையுள்ளோருக்குச் செல்வக் குவியல்களை அளிப்பது மட்டுமல்ல; நமது திறமைகள், செயல்கள், மற்றும் தொடர்புகளை நல்கி அனைத்து வகையான கொடைகளையும் கொண்டாட வேண்டும்”, என்றும் கூறினார்.
பொது, தனியார், நன்கொடை துறைகளைச் சார்ந்த மூன்று இளம் சிங்கப்பூரர்கள் ‘முன்னேறும் சிங்கப்பூர்’ கலந்துரையாடலில் முன்வைத்த எண்ணங்களுக்கு மறுமொழியாக ஜூன் 2022ல் உருவாக்கம் கண்ட ‘இம்பேக்ட்எஸ்ஜி’யின் பயணத்தில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட தனிநபர்கள் இணைந்துள்ளதாகவும் உதவி நாட தேசியப் புற்றுநோய் நிலையம் ‘தி பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை’ உள்ளிட்ட பதினெட்டு அமைப்புகளுடன் இத்திட்டம் பங்காளித்துவம் கொண்டுள்ளது என்றும் அதன் செய்தியறிக்கை சுட்டியது.
தொடர்புடைய செய்திகள்
வாடகை வீட்டில் பிள்ளைகளுடன் வசிக்கும் குடும்பங்களுக்கான முன்னேற்றம், வட்டாரத்தில் புற்றுநோய் பாதிப்பால் வாடும் சிறாருக்கு உதவுதல் தொடர்பிலான திட்டங்களை நிறுவுவதற்கும் திட்டம் உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.