எஸ்பிளனேட் திறந்தவெளி அரங்கம் இரண்டு நாள்களுக்குக் கலைகளின் துடிப்பான களமாக மாறியது.
இந்தியப் பாரம்பரிய மரபுக் கலைகளின் இதயத் துடிப்பை உணரவைக்கும் வகையில் ‘ஆனந்தக் கொண்டாட்டம் 2025’ களைகட்டியது.
தலைமுறை தலைமுறையாக இந்தியப் பாரம்பரியத்தில் பின்னிப் பிணைந்திருக்கும் கலை வடிவங்களைக் காட்சிப்படுத்தும் மைய நோக்கத்துடன் இந்தக் கலை விழா மேடையேறியது.
சென்ற ஆண்டு ‘ஆட்டம்’ அறிமுகப்படுத்திய ஆனந்தக் கொண்டாட்டத்தின் மகத்தான வெற்றியின் தொடர்ச்சியாக இந்த ஆண்டு ‘நன்றியுணர்வும் கொண்டாட்டமும்’ என்ற கருப்பொருளுடன் அவ்விழா நடத்தப்பட்டது.
“மரபுக்கலைகள் மூலம் அனைவரையும் உள்ளடக்க வேண்டும் என்பதே எங்களது முக்கிய நோக்கம். மரபுக்கலைகள் வைத்து சீன, மலாய் கலாசாரக் கூறுகளும் இணைந்திருப்பதால் இது எஸ்ஜி60 ஆண்டை நன்கு வெளிப்படுத்துகிறது,” என்று கூறினார் ‘ஆட்டம்’ நிறுவனர் கோபி கண்ணன்.
உள்ளூர், வெளிநாடு என 200க்கும் மேற்பட்ட கலைஞர்கள் தொன்மையான கலையாற்றலை வெளிப்படுத்தினர். அதில் 70 விழுக்காட்டிற்கும் மேற்பட்டவர்கள் இளையர்கள்.
கலைஞர்களின் இசையும் மேடைப் படைப்பும் இரவுக்குப் பல வண்ணங்களைக் கூட்டி அந்தப் பொழுதை உயிரோட்டமுள்ளதாகவும் மறக்க முடியாததாகவும் மாற்றியது.
ஆகஸ்ட் 29, 30ஆம் தேதிகளில் நடைபெற்ற இக்கொண்டாட்டத்தின் இறுதி நாளான சனிக்கிழமை, பிரதமர் லாரன்ஸ் வோங் வருகைபுரிந்து சிறப்பித்தார்.
தொடர்புடைய செய்திகள்
அவருடன் கலாசார, சமூக, இளையர்துறை; மனிதவள துணை அமைச்சர் தினேஷ் வாசு தாசும் வந்திருந்தார்.
“இந்திய மரபுக்கலைகள் மக்களை ஒன்றிணைக்கும் ஆற்றல்மிக்கது. ‘ஆட்டம்’ போன்ற நிகழ்ச்சிகள் மூலம் இந்தியாவில் இருக்கும் வெவ்வேறு மரபுக்கலைகளை மக்களுக்குக் கொண்டுசேர்க்க முடியும். மேலும், சிங்கப்பூர் கலாசார தாக்கம் இதில் இணையும்போது சிங்கப்பூர் கலைஞர்கள் இந்திவாயிலும்கூட நிகழ்ச்சி படைக்கும் அளவிற்கு வளரலாம்,” என்று கூறினார் திரு தினேஷ்.
நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக பிரதமர் வோங், தபேலா இசைக்கருவிபோல காணப்படும் கிண்ண வடிவிலான துடும்பை இசைத்தார். அவருடன் திரு தினேஷ் வாசு தாசும் இணைந்திருந்தார். அப்போது பார்வையாளர்கள் அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
பிரதமர் வோங்குடன் நின்று துடும்பு வாசித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த கலைஞர் குருநாதன், 40, அந்த மட்டற்ற மகிழ்ச்சி அளித்த தருணத்தைத் துடும்பாட்டக் கலைக்குக் கிடைத்த அங்கீகாரமாகக் கருதுகிறார்.
துடும்பாட்டத்தைப் பற்றி விளக்கிய அவர், அது தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற ஒரு கலை என்றும் துடும்பை வாசிக்கும்போது கிட்டத்தட்ட 10 கிலோமீட்டர் வரையிலும் அதன் ஓசை ஒலிக்கும் என்றும் கூறினார்.
இரு நாள்களிலும் நிகழ்ச்சிகள் இரு பாகங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன. தேவராட்டம், கல்பேலியா, கைச்சிலம்பம், சிலம்பாட்டம், கரகாட்டம், கர்பா, சக்கை குச்சியாட்டம் என 20க்கும் மேற்பட்ட கலைகள் ஒரே தளத்தில் சங்கமித்தன.
பல்வேறு கலாசாரங்களை ஒருங்கிணைக்கும் நாடு சிங்கப்பூர் என்பதை டோல் வாசித்த அமெரிக்கப் பெண் பெட்சி விட்டேக்கர், 48, நிரூபித்தார்.
நிகழ்ச்சியில் பாங்ரா நடன அங்கத்தில் டோல் வாசித்த அவர், சிங்கப்பூரில் பல ஆண்டுகளாக வசித்து வருகிறார்.
“ஆனந்தக் கொண்டாட்டத்தில் பங்கேற்றத்தில் எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது. எனக்கு ஏற்கெனவே பல இசைக்கருவிகளை வாசிக்கத் தெரியும். ஆனால், பல கலாசாரக் கூறுகள் பிணைந்த இசைக்கருவியை வாசிப்பது முதலில் கடினமாக இருந்தது,” என்று கூறினார் பெட்சி.
சிங்கப்பூரின் 60வது பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு ஆனந்தக் கொண்டாட்டம், சிங்காட்டம் மூலம் நாட்டின் பன்முகக் கலாசாரத்தை வெளிக்காட்டியது.
நிகழ்ச்சியின் இன்னொரு சிறப்பம்சமாக, சிங்கப்பூரின் தமிழ் ராப் பாடகர் யங் ராஜா உருமி மேளம், செண்டை மேளம் இரண்டுடன் இணைந்து அதிவேக ராப் இசையைப் பாரம்பரிய தாளங்களுடன் கலந்து வழங்கினார்.
சீன, மலாய் தாள இசையின் துடிப்பான ஆற்றலையும் ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் போன்ற பாரம்பரிய இந்திய நாட்டுப்புறக் கலைகளின் துடிப்பையும் கலந்து பார்வையாளர்களை மகிழ வைத்தது இக்கொண்டாட்டம்.
“பல்வேறு சமூகங்களை இணைப்பதே இவ்வாண்டு ஆனந்தக் கொண்டாட்டத்தின் சிறப்பம்சம். பிரதமர் லாரன்ஸ் வோங்கின் ஆதரவு மரபுக்கலைகளுக்குக் கிடைத்தது இன்னும் மகிழ்ச்சி அளிக்கிறது. சிங்கப்பூரில் மரபுக்கலைகளை வளர்ப்பதற்கான ஊக்கம் இன்னும் கூடியுள்ளது,” என்றார் ‘ஆட்டம்’ தலைமை நிர்வாக அதிகாரி சுப்பு அடைக்கலவன், 30.
“எனக்கு இது முதன்முறை அனுபவம். அரங்கமே நிறைந்த அளவில் கலை நிகழ்ச்சி மிக சுவாரசியமாக நடைபெற்றது. மரபுக்கலைகளில் இவ்வளவு வரலாறு நிறைந்துள்ளது என்பதை அறிந்துகொண்டேன்,” என்றார் பார்வையாளர்களில் ஒருவரான சம்பூரணம், 61.

