இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று பிரதமர் லாரன்ஸ் வோங் இந்தியத் தலைநகர் புதுடெல்லிக்கு செப்டம்பர் 2ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரை அதிகாரத்துவப் பயணம் மேற்கொள்கிறார்.
அங்கு பிரதமர் மோடியுடன் சந்திப்பு நடத்தும் திரு வோங்குக்கு சிறப்பு நண்பகல் விருந்தளித்துச் சிறப்பிக்கவுள்ளார் திரு மோடி.
இந்திய அதிபர் திரௌபதி முர்முவையும் பிரதமர் வோங் சந்திப்பார்.
பிரதமராகப் பதவியேற்றபின் திரு வோங் மேற்கொள்ளும் முதல் இந்தியப் பயணம் உலக அரசியலின் முக்கியத் தருணத்தில் நடைபெறுகிறது.
அமெரிக்காவின் வரிவிதிப்புச் சூழலில் இந்தியாவும் சீனாவும் உறவுகளுக்குப் புத்துயிரூட்டியுள்ளன. திரு மோடி, சீனாவுக்கும் ஜப்பானுக்கும் பயணம் மேற்கொண்டு உறவுகளை வலுப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் சிங்கப்பூரும் இந்தியாவும் கொண்டுள்ள கடப்பாட்டை வெளிப்படுத்தும் வண்ணம் பிரதமர் வோங்கின் இந்தப் பயணம் இடம்பெறுகிறது.
சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான அரசதந்திர நட்புறவு தொடங்கி 60 ஆண்டுகள் ஆன நிலையில் முக்கியத்துவம் வாய்ந்த பயணமாக இது கருதப்படுகிறது.
இருநாட்டு உறவுகளுக்கு மகுடம் சூட்டும் இந்தச் சிறப்புமிக்க மைல்கல்லைக் கொண்டாடும் விதமாக இவ்வாண்டுத் தொடக்கத்தில் அதிபர் தர்மன் சண்முகரத்னம் இந்தியாவிற்கு அரசமுறைப் பயணம் மேற்கொண்டார். அப்போது புதுடெல்லிக்கும் ஒடிசாவுக்கும் அதிபர் தர்மன் சென்றிருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருநாட்டு உறவுகள் மேம்பாடு கண்டு விரிவான உத்திபூர்வ பங்காளித்துவமாக இருந்து வருகிறது.
கடந்த மாதம் சிங்கப்பூரிலிருந்து ஆறு அமைச்சர்கள் புதுடெல்லி சென்று இந்திய அமைச்சர்களுடனான மூன்றாவது இந்தியா-சிங்கப்பூர் அமைச்சர்நிலை வட்டமேசைச் சந்திப்பை நடத்தினர்.
துணைப் பிரதமர் கான் கிம் யோங், தேசிய பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சரும் உள்துறை அமைச்சருமான கா சண்முகம், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ, மனிதவள அமைச்சர் டான் சீ லெங், போக்குவரத்துத் தற்காலிக அமைச்சர் ஜெஃப்ரி சியாவ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அதிபர், பிரதமருடனான சந்திப்புகளைத் தாண்டி திரு வோங் பல இந்திய அமைச்சர்களுடன் சந்திப்பு நடத்துகிறார்.
சுகாதார, குடும்பநல அமைச்சரும் வேதிப்பொருள், உரத்துறை அமைச்சரும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவருமான ஜே.பி. நட்டா, நிதி, வர்த்தக விவகார அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் பிரதமர் வோங்குடன் சந்திப்பு நடத்துவர்.
தமது பயணத்தின்போது மகாத்மா காந்தியின் நினைவிடமான ராஜ் காட்டிற்குச் சென்று பிரதமர் வோங் மரியாதை செலுத்துவார்.
இருநாடுகளுக்கும் இடையிலான 60 ஆண்டு நட்புறவைக் குறிக்கும் வகையிலும் சிங்கப்பூரின் 60ஆம் ஆண்டு சுதந்திரத்தைக் குறிக்கும் எஸ்ஜி60 கொண்டாட்டமாகவும் புதுடெல்லியில் வாழும் சிங்கப்பூரர்களுடன் பிரதமர் வோங் விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்.
இந்திய வர்த்தகத் தலைவர்களுடன் தனிப்பட்ட வட்டமேசை நிகழ்ச்சியில் பிரதமர் கலந்துகொள்கிறார்.
பிரதமர் வோங்குடன் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், போக்குவரத்துத் தற்காலிக அமைச்சரும் நிதி மூத்த துணை அமைச்சருமான ஜெஃப்ரி சியாவ், வெளியுறவு அமைச்சு, வர்த்தக, தொழில் அமைச்சுகளுக்கான துணை அமைச்சர் கான் சியாவ் ஹுவாங், பிரதமர் அலுவலக, வெளியுறவு அமைச்சு, வர்த்தக, தொழில் அமைச்சு, போக்குவரத்து அமைச்சு, தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு ஆகியவற்றின் அதிகாரிகளும் பயணத்தில் இடம்பெறுவர் என்று செப்டம்பர் 2ஆம் தேதி பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரதமர் வோங்கின் இந்தியப் பயணத்தின்போது தேசிய பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சரும் உள்துறை அமைச்சருமான திரு கா சண்முகம் இடைக்காலப் பிரதமராகப் பொறுப்பு வகிப்பார்.