கத்தார் மன்னர் ஷேக் தமிம் பின் ஹமத் அல் தானியுடனும் பஹ்ரேனின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான சல்மான் பின் ஹமத் அல் கலிஃபாவுடனும் பிரதமர் லாரன்ஸ் வோங் தனித்தனியே இருதரப்பு சந்திப்புகளை நடத்தினார்.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற ஆசியான் உச்சநிலை மாநாடுகளின் மத்தியில் இந்தச் சந்திப்புகள் நடந்தன.
46வது ஆசியான் உச்சநிலை மாநாடுகளின் அங்கமாக வெளிப் பங்காளித்துவ அமைப்புகளுடன் மாநாடுகளை ஏற்பாடு செய்துள்ளது ஆசியான் அமைப்பின் தலைமைத்துவத்தை ஏற்று நடத்திவரும் மலேசியா.
அதில் இரண்டாவது ஆசியான்-ஜிசிசி மாநாடு செவ்வாய்க்கிழமை (மே 27) நடைபெற்றது.
ஜிசிசி எனும் வளைகுடா ஒத்துழைப்பு மன்றம் பஹ்ரேன், குவைத், ஓமான், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு சிற்றரசுகள் ஆகிய மத்தியக் கிழக்கு நாடுகளை இணைக்கும் வட்டார அமைப்பாகும்.
முதல் முறையாக ஆசியான்-ஜிசிசி-சீனா உச்சநிலை மாநாடும் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அந்தச் சந்திப்புகளில் கலந்துகொள்ள மலேசியாவிற்கு வந்த கத்தார், பஹ்ரேன் நாட்டுத் தலைவர்களுடன் நடைபெற்ற சந்திப்புகள், சிங்கப்பூருக்கும் அந்த நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மறுஉறுதிப்படுத்தியுள்ளன.
ஆசியான் உச்சநிலை மாநாட்டில் பிரதமர் என்ற முறையில் இரண்டாவது முறையாகக் கலந்துகொள்ளும் திரு வோங், இருநாள்களில் குவைத், இந்தோனீசியா, மலேசியா, கத்தார், பஹ்ரேன் ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்புச் சந்திப்புகளை நடத்தியுள்ளார்.

