தற்போது சாங்கி விமான நிலையத்தின் 1, 2, 3ஆம் முனையங்களில் செயல்படும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஸ்கூட் விமானச் சேவைகள் விரைவில் புதிதாகக் கட்டப்படும் ஐந்தாம் முனையத்தில் செயல்படவிருக்கின்றன.
ஐந்தாம் முனையம் 2030களின் மத்தியில் செயல்பாட்டுக்கு வரும் என்று புதன்கிழமை (மே 14) நடைபெற்ற அதன் நில அகழ்வுப் பணி தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்தார்.
“இதன் மூலம் நேரத்தைப் பெரிதும் சேமிக்க முடியும். புதிய ஐந்தாம் முனையத்தில் பல அம்சங்கள் அடங்கியுள்ளன,” என்றார் பிரதமர் வோங்.
ஐந்தாம் முனையத்திற்கு ஒவ்வோர் ஆண்டும் 50 மில்லியன் பயணிகள் வந்துசெல்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் சிங்கப்பூர் மேலும் வளர்ச்சியடையக் கூடும் என்று சாங்கி விமான நிலையக் குழுமம் தெரிவித்தது.
கட்டுமானப் பணிகள் அடுத்த சில ஆண்டுகளில் தீவிரமடையும் என்று குழுமத்தின் சாங்கி ஈஸ்ட் பிரிவின் நிர்வாக இயக்குநர் ஓங் சீ சியாவ் சொன்னார்.
ஐந்தாம் முனையம் திறப்பதற்குள் மூன்று ஓடுபாதைகள் செயல்பாட்டில் இருக்குமென்று கூறிய அவர், விமானப் போக்குவரத்தைச் சமாளிக்க இரண்டாவது கட்டுப்பாட்டுக் கோபுரம் கட்டப்படும் என்றார்.
ஐந்தாம் முனையம் 1,080 ஹெக்டர் பரப்பளவு கொண்ட சாங்கி ஈஸ்ட் மேம்பாட்டுப் பகுதிக்குள் அமைந்துள்ளது. இது தற்போதைய சாங்கி விமான நிலைய மொத்த நிலப்பரப்புக்குச் சமம்.
தொடர்புடைய செய்திகள்
சாங்கி விமான நிலைய மேம்பாட்டு நிதி, விமான நிலைய விரிவாக்கம், ஐந்தாம் முனையக் கட்டுமானம் ஆகியவற்றை ஆதரிப்பதற்காக 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இதுவரை அரசாங்கம் அதற்கு $11 பில்லியன் அளித்துள்ளது.
நவீன அமைப்புகள்
ஐந்தாம் முனையத்தில் பயணிகளின் அனுபவத்தை மெருகூட்டும் விதமாகத் தானியக்க வசதிகளும், தொழிநுட்பமும் பயன்படுத்தப்படும்.
மோசமான வானிலையில் இயங்கக்கூடிய, பயணப்பைகளை எடுத்துச்செல்லக் கூடிய இயந்திரங்களை நடப்புக்குக் கொண்டுவருவது, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது ஆகியவை அவற்றில் அடங்கும்.
பயணிகள் நடமாட ஏதுவாக இருக்கும் வகையில் இரண்டு தானியக்க நகர்த்தும் அமைப்பு நடப்புக்கு வரும். இந்தக் கட்டமைப்பு ஐந்தாம் முனையத்தை இரண்டாம் முனையத்துடன் இணைக்கும் விதத்திலும் செயல்படும்.
சிறந்த இணைப்பு கொண்ட பெருவிரைவு ரயில் கட்டமைப்பு
பெருவிரைவு ரயிலைப் பயன்படுத்துபவர்களுக்கு ஏதுவாக இருக்கும் வகையில் தாம்சன் - ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதை ஐந்தாம் முனையம் வரை நீட்டிக்கப்படும். அது சிங்கப்பூர் - ஜோகூர் விரைவு ரயில் கட்டமைப்பு வரையிலும் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐந்தாம் முனையத்தைப் பொங்கோல் மின்னிலக்க வட்டாரம், ஜூரோங் லேக் வட்டாரம் ஆகியவற்றுடன் இணைக்கக் குறுக்குத் தீவு ரயில் பாதைத் திட்டப் பணிகள் பரிசீலிக்கப்படுகின்றன.
ஐந்தாம் முனையம் தானா மேரா படகு முனையத்திற்கு அருகில் இருப்பதால் கடல்வழி இணைப்புக்கான வாய்ப்பும் இருக்கிறது.
மீள்தன்மையுடன் விளங்கக் கட்டப்படும் முனையம்
கடல் மட்ட உயர்வு போன்ற தீவிர வானிலை, காலநிலை மாற்றத்தின் விளைவுகளைத் தாங்கும் வகையில் ஐந்தாம் முனையம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
விமான நிலையம் கடல் மட்டத்திலிருந்து 5.5 மீ உயரத்தில் இருக்கிறது. அதிக அலைகள் குறிப்பாகக் கடல் மட்டம் உயரும்போது அச்சூழலைத் திறம்பட நிர்வகிக்கவும், கடுமையான புயல்களால் ஏற்படும் கனமழையைக் கையாளவும் விமான நிலைய வடிகால் அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.