ஒற்றுமையுடன் இருந்தால் எந்தச் சவாலையும் முறியடிக்கலாம்: பிரதமர் லாரன்ஸ் வோங்

ஒற்றுமையுடன் இருந்தால் எந்தச் சவாலையும் முறியடிக்கலாம்: பிரதமர் லாரன்ஸ் வோங்

2 mins read
bd56d9f7-b920-40b0-995e-9069357226b4
பள்ளிவாசல் நோன்பு துறப்பில் பிரதமர் லாரன்ஸ் வோங்கும், முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சரும் உள்துறைக்கான மூத்த துணை அமைச்சருமான முஹம்மது ஃபைஷால் இப்ராஹிமும் கலந்துகொண்டனர். - படம்: பெரித்தா ஹரியான்

சிங்கப்பூரர்கள் ஒற்றுமையாக இருக்கும்வரை எத்தகைய சவால்களையும் முறியடிக்க முடியும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.

பீஷானில் அமைந்துள்ள அன் நஹ்தா பள்ளிவாசலில் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 24) நடைபெற்ற நோன்பு துறப்பு நிகழ்வில் பிரதமர் வோங் கலந்துகொண்டார்.

இந்த ரமலான் மாதத்தில் பள்ளிவாசல் ஒன்றில் பிரதமர் நோன்பு துறந்தது இதுவே முதன்முறை.

செவ்வாய்க்கிழமை மாலை 6.50 மணிக்கு நிதி அமைச்சருமான திரு லாரன்ஸ் வோங் பள்ளிவாசலை வந்தடைந்தார்.

அவருடன் முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சரும், உள்துறை மூத்த துணை அமைச்சருமான முஹம்மது ஃபைஷால் இப்ராஹிம் நோன்பு துறப்பில் கலந்துகொண்டார்.

சிங்கப்பூர் இஸ்லாமியச் சமய மன்றம் (முயிஸ்) ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யும் இந்த நோன்பு துறப்பு வெவ்வேறு சமயப் பங்காளிகளையும் பள்ளிவாசல் தலைவர்களையும் ஒன்றிணைத்தது.

அன் நஹ்தா பள்ளிவாசலில் நோன்பு துறந்த இறையன்பர்கள்.
அன் நஹ்தா பள்ளிவாசலில் நோன்பு துறந்த இறையன்பர்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நோன்பு துறப்பதற்கு முன்னர் திரு வோங் பள்ளிவாசலைப் பார்வையிட்டார். பின்னர் அவர் பள்ளிவாசலில் அமைந்துள்ள நல்லிணக்க நிலையத்தையும் சுற்றிப் பார்த்தார்.

“சிங்கப்பூரில் நாம் ஒருவருக்கொருவர் கலாசாரத்தை அரவணைத்து வாழ முடிகிறது. இதை நாம் தொடர்ந்து போற்ற வேண்டும். பிளவுகள் அதிகரித்துவரும் இவ்வுலகில் சிங்கப்பூரின் நல்லிணக்கம் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு பொக்கிஷமாகும். நாம் ஒற்றுமையாக இருக்கும் வரை எத்தகைய சவால்களையும் நம்மால் முறியடிக்க முடியும்,” என்று பிரதமர் வோங் வலியுறுத்தினார்.

இரவு 7.20 மணியளவில் நோன்பு துறப்பு இடம்பெற்றது. பிரதமர் வோங் இறையன்பர்களுடன் இணைந்து சகோதரத்துவத்துடன் நோன்பு துறந்தார்.

அன் நஹ்தா பள்ளிவாசலுக்கும் நல்லிணக்க நிலையத்திற்கும் இடையிலான உறவு சிங்கப்பூரின் பன்முகக் கலாசார சமூகத்தில் சமயங்களுக்கு இடையிலான பிணைப்பையும் சமயப் புரிந்துணர்வையும் வலுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

2006ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்நிலையம், சிங்கப்பூரில் இஸ்லாம் குறித்த ஆழமான புரிந்துணர்வை மேம்படுத்துவதற்கும் அனைத்து சமய உறவுகளை வலுப்படுத்துவதற்குமான ஒரு தளமாகவும் விளங்குகிறது.

நல்லிணக்க நிலையத்தில் சிங்கப்பூரின் இன, சமய நல்லிணக்க முன்மாதிரியைச் சிறப்பித்துக் காட்டும் கண்காட்சியும் அமைந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்