சிங்கப்பூரின் சொத்துச் சந்தையில் வர்த்தக ரீதியாக அதிகமானோர் விரும்பும் வட்டாரம் (prime locations), குடியிருப்பு வட்டாரங்கள் ஆகியவற்றில் சில்லறை விற்பனை வர்த்தகர்களுக்கான வாடகை அடுத்த ஆண்டு தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகச் செலவு தொடர்பிலான சவால்களைச் சில்லறை விற்பனையாளர்கள் எதிர்கொண்டு வருகின்றனர். இருந்தாலும் முக்கியச் சொத்துகளின் உரிமையாளர்கள் அதிக வாடகை கேட்கும் நிலை தொடர்ந்து இருப்பதாக பிஸ்னஸ் டைம்ஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.
பெயர்பெற்ற பல நிறுவனங்கள் வர்த்தகம் செய்ய உயர்தர இடங்களை நாடி வருகின்றன. அதனால் சில்லறை விற்பனை இடங்களுக்கான தேவை தொடர்ந்து அதிகமாக இருந்து வருகிறது.
2026ஆம் ஆண்டில் அதிகமானோர் விரும்பும் பகுதிகளில் சில்லறை விற்பனையாளர்களுக்கான வாடகை ஒன்றிலிருந்து நான்கு விழுக்காடு அதிகரிக்கும் என்று சந்தை கவனிப்பாளர்கள் கணித்துள்ளனர். அந்த வகையில், குடியிருப்பு வட்டாரங்களில் இருக்கும் கடைத்தொகுதிகளைக் காட்டிலும் பொதுவாக மத்தியப் பகுதிகளில் உள்ள கடைத்தொகுதிகளில் கூடுதல் கடைப் பகுதிகள் நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர்ச்சர்ட் ரோட்டில் உள்ள முதன்மைக் கடைத்தொகுதிகளில் சராசரி சில்லறை வர்த்தக வாடகை 2026ல் ஆண்டு அடிப்படையில் மூன்று விழுக்காடு அதிகரிக்கக்கூடும் என்று சவில்ஸ் சிங்கப்பூர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஏலன் சியோங் தெரிவித்தார். ஆர்ச்சர்ட் ரோடு, குடியிருப்பு வட்டாரங்கள் ஆகிய இருவகைப் பகுதிகளிலும் உள்ள கடைத்தொகுதிகளில் இவ்வாண்டு சில்லறை வர்த்தக இட வாடகை ஒன்றிலிருந்து இரண்டு விழுக்காடு கூடும் என்று எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.
செலவு குறித்த நெருக்குதல்கள் போன்ற சவால்கள் இருக்கும்போதும் புதிய வாடகைதாரர்கள், தற்போது வர்த்தகத்தில் ஈடுபட்டு வருபவர்கள் ஆகியோரிடையே முதன்மை வட்டாரங்களில் சில்லறை விற்பனைப் பகுதிகளுக்கான தேவை தொடர்ந்து வலுவாக இருப்பதாக சிபிஆர்இ (CBRE) நிறுவனத்தின் தென்கிழக்காசிய ஆய்வுப் பிரிவுத் தலைவர் ட்ரிஷியா சோங் தெரிவித்தார்.
புதிதாக சில்லறை விற்பனையில் இறங்கும் பலர் இன்னமும் குறிப்பிட்ட சில முதன்மை வட்டார, குடியிருப்பு வட்டாரக் கடைத்தொகுதிகளையே விரும்புவதாக சவில்ஸ் சிங்கப்பூரின் சில்லறை விற்பனை மற்றும் வாழ்வும் வளமும் (lifestyle) பிரிவின் நிர்வாக இயக்குநர் சுலியேன் டான்-விஜாயா சொன்னார்.
சில்லறை வர்த்தக வாடகையைப் பொறுத்தவரை குடியிருப்பு வட்டாரங்களில் உள்ள கடைத்தொகுதிகள்தான் 2025ல் ஆக அதிகமாகப் பலனடையும் என்று தாம் எதிர்பார்ப்பதாக ஜேஎல்எல் நிறுவனத்தின் தென்கிழக்காசியாவுக்கான ஆய்வு மற்றும் ஆலோசனைப் பிரிவுத் தலைவர் சுவா யாங் லியாங் தெரிவித்தார். அத்தகைய கடைத்தொகுதிகளில் பலவகை சில்லறை விற்பனைக் கடைகள் இருப்பது அதற்குக் காரணம் என்றார் அவர்.

