சிங்கப்பூரில் மதியிறுக்கத்தால் பாதிக்கப்பட்ட நான்கு வயதுப் பிள்ளையைத் தொடர்ச்சியாகத் துன்புறுத்தியதற்காக இல்லப் பணிப்பெண் ஒருவருக்கு மூவாண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தோனீசியாவைச் சேர்ந்த அந்த 29 வயதுப் பணிப்பெண், தமது பராமரிப்பில் இருந்த பிள்ளையைக் குறைந்தது 23 முறை குத்தியதாகக் கூறப்பட்டது.
பணிப்பெண் வேலை செய்த குடும்பத்தில் மூன்று பிள்ளைகள் இருந்தனர். அவர்களை ஆபாசமாகக் காணொளியில் பதிவுசெய்து தமது கணவருக்கு அனுப்பியதற்காகவும் அந்தப் பெண்ணுக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டோரின் அடையாளத்தை ரகசியமாக வைத்திருப்பதற்காகப் பணிப்பெண்ணின் பெயரை நீதிமன்றம் வெளியிடவில்லை.
பிள்ளைகளின் ஆபாச காணொளிகளையும் துன்புறுத்தல் படங்களையும் பணிப்பெண்ணின் கைப்பேசியில் கண்டுபிடித்த உரிமையாளர் அதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து மார்ச் மாதம் அவர் கைதுசெய்யப்பட்டார்.
வீட்டின் குளியலறையில் பிள்ளைகள் நிர்வாணமாக இருந்த காணொளிகளும் படங்களும் விசாரணையின்போது கண்டுபிடிக்கப்பட்டது.
மதியிறுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிறுவனைப் பார்த்துக்கொள்வதால் ஏற்பட்ட விரக்தியாலும் சோர்வாலும் அவனைத் துன்புறுத்தத் தொடங்கியதாக நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிட்டன. ஆனால், சிறுவனைத் துன்புறுத்துவதற்கான காரணங்கள் ஏற்புடையதல்ல என்று வழக்கறிஞர்கள் வாதாடினர். பணிப்பெண்ணுக்குத் தீர்ப்பளித்த நீதிபதி, “பிள்ளையால் பேச முடியாது. அடுத்தவர்களிடம் உதவியும் கேட்க முடியாது. பராமரிக்கும்படி ஒப்படைக்கப்பட்ட நபரே துன்புறுத்தியது நம்பிக்கை மோசடி,” என்றார்.
