நாடாளுமன்றச் சிறப்புரிமைக் குழுவின் முன்னிலையில் பொய்யுரைத்ததாகக் குறிப்பிடும் வழக்கில் பாட்டாளிக் கட்சித் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங், குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில், அதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக அவர் கூறியுள்ளார்.
தீர்ப்புக்குப் பிறகு நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த அவர், எதிர்வரும் பொதுத் தேர்தலில் தாம் போட்டியிடப் போவதாகவும் தெரிவித்தார்.
தீர்ப்பின் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவது குறித்து பரிசீலிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுமா என்ற கேள்விக்குப் பதிலளித்த சிங், “இது நான் பின்னோக்கிச் செல்வதற்கான நேரம் அல்ல, முன்னோக்கிச் செல்வதற்கான நேரம்,” என்றார்.
மேலும், தேர்தல் காலம் நெருங்கி வருவதாகக் குறிப்பிட்ட அவர், “பாட்டாளிக் கட்சியின் சக உறுப்பினர்களுக்கு எனது பொது உரைகளின்போது நான் பலமுறை பகிர்ந்ததுபோல, இது எளிதான தேர்தலாக இருக்கப்போவதில்லை. எனவே, நாங்கள் கடுமையாகப் போராட வேண்டியிருக்கும், அதைத்தான் நாங்கள் செய்வோம்,” என்றார்.
தமக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனை, கட்சியின் மனஉறுதியைப் பாதித்துள்ளதா என்ற கேள்விக்குப் பதிலளித்த அல்ஜுனிட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான சிங், “என்னைப் பொறுத்தவரை, கட்சியின் மன உறுதி பாதிக்கப்படவில்லை. எதிர்க்கட்சிக்கான அரசியலைத் தேர்ந்தெடுக்கும் பாதை பலவீனமானவர்களுக்கு உரியதன்று,” என்று சொன்னார்.
சிங்கப்பூர் சுதந்திரம் பெற்ற பிறகு நாடாளுமன்ற (சலுகைகள், விலக்குரிமைகள் மற்றும் அதிகாரங்கள்) சட்டத்தின் பிரிவு 31(q) இன்கீழ் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட முதல் நபர் சிங் ஆவார். இச்சட்டத்தின்படி, நாடாளுமன்றம் அல்லது அதன் குழுக்கள் எழுப்பும் கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போது பொய் சொல்வது குற்றம்.