சிங்கப்பூரின் எதிர்க்கட்சித் தலைவரான பிரித்தம் சிங்கின் வழக்கு விசாரணை திங்கட்கிழமையன்று (அக்டோபர் 14) தொடங்கும்.
பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளரான சிங், நாடாளுமன்றக் குழுவிடம் பொய் சொன்னதாகச் சுமத்தப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளுக்கு எதிராக வாதிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த நாடாளுமன்ற அமர்வில் சிங் அவ்வாறு செய்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.
முன்னாள் பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரயீசா கான் சம்பந்தப்பட்ட சர்ச்சையில் சிங் பொய் சொன்னதாகக் கருதப்படுகிறது.
திருவாட்டி கான், நாடாளுமன்றச் சலுகையைத் தவறாகப் பயன்படுத்தினார் என்று நாடாளுமன்றக் குழு கண்டுபிடித்தது. முன்னாள் செங்காங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான அவருக்கு 35,000 வெள்ளி அபராதம் விதிக்குமாறு குழு பரிந்துரைத்தது.
இதன் தொடர்பில் சிங், பாட்டாளிக் கட்சித் துணைத் தலைவர் ஃபைசல் மனாப் இருவரின் பிரச்சினையை அரசு வழக்கறிஞரிடம் சமர்ப்பிக்குமாறும் குழு பரிந்துரைத்தது. இருவர் மீதும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.
உண்மையைக் கூறுவதாக உறுதிமொழி எடுத்துக்கொண்ட பிறகும் சிங் உண்மை பேசவில்லை என்று நாடாளுமன்றக் குழு குறிப்பிட்டது. திரு ஃபைசல், முன்வைக்கப்பட்ட சம்பந்தப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கவில்லை என்றும் குழு சொன்னது.
கடந்த மார்ச் மாதம் 19ஆம் தேதியன்று சிங் மீது, நாடாளுமன்றக் குழுவின் கேள்விகளுக்குப் பொய்யான பதில்களை அளித்ததாக சிங் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. ஆனால் அவற்றை திரு சிங் மறுத்தார்.
திரு ஃபைசல் மீது குற்றச்சாட்டு ஏதும் சுமத்தப்படவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் எதிர்பார்க்கப்படும் நடத்தையை நன்கு அறிந்துகொள்ளுமாறு அவருக்குக் காவல்துறை எச்சரிக்கும் அறிவுரை வழங்கியது.