தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மாற்றப்பட்ட படத்தைக் கொண்டு விளம்பரம்: அமைச்சர் எச்சரிக்கை

2 mins read
31388a7e-d928-4044-8ac9-7f38762f3bc8
உண்மையான படம், மாற்றப்பட்ட படம் இரண்டையும் பகிர்ந்துகொண்டார் மூத்த துணை அமைச்சர் லோ யென் லிங். - படம்: லோ யென் லிங் / ஃபேஸ்புக்

போலியாகத் தாம் சம்பந்தப்படுத்தப்பட்ட முதலீட்டு மோசடி ஒன்று குறித்து விழிப்புடன் இருக்குமாறு மூத்த துணை அமைச்சர் லோ யென் லிங் மக்களை எச்சரித்துள்ளார்.

தாம் இடம்பெறும் ஒரு படம் மாற்றப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது; அதையும் போலிச் செயலி ஒன்றையும் ஒரு வீசாட் (WeChat) குழுவையும் கொண்டு முதலீட்டு மோசடி மேற்கொள்ளப்பட்டுவருவதாக அவர் தெரிவித்தார். சீனாவில் உள்ள சொத்து நிர்வாகச் சேவைகளை விளம்பரப்படுத்தும் அந்த மோசடி குறித்து திருவாட்டி லோவுடன் தெமாசெக் நிறுவனமும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மாற்றப்பட்ட அந்தப் படத்தில், இரு கற்பனை அமைப்புகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்ச்சியில் திருவாட்டி லோ காணப்படுகிறார். அப்படம், சீனாவின் ஒரு வர்த்தகச் சபைக்கும் ‘டய்பாய்’ எனும் ‘சொத்து நிறுவனம்’ ஒன்றுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்வைச் சித்திரிக்கிறது.

அப்படம், சீனாவின் செயலி ஒன்றில் தவறாகப் பயன்படுத்தப்பட்டது. அந்தச் செயலியின் பெயரும் டய்பாய். அதேவேளை, சொத்து நிர்வாகச் சேவை விளம்பரங்களுக்கும் அப்படம் வீசாட் செயலியில் பயனர் குழு ஒன்றில் பகிரப்பட்டது.

திருவாட்டி லோ திங்கட்கிழமை (மே 12) இந்த விவரங்களை ஃபேஸ்புக்கில் தெரிவித்தார்.

தெமாசெக் நடத்தும் நிறுவனம் ஒன்றைப் போல் டய்பாய் செயலி ‘இயங்குகிறது’. மேலும், போலி முதலீடுகள் குறித்த தகவல்கள் ஜிங் ‌ஷாங் ஹுய் (Jing Shang Hui) எனும் வீசாட் பயனர் குழுவில் பகிரப்பட்டன என்று சிங்கப்பூர் முதலீட்டு நிறுவனமான தெமாசெக் திங்கட்கிழமையன்று குறிப்பிட்டது. அந்த வீசாட் குழுவின் பெயரை மொழிபெயர்த்தால் பெய்ஜிங் வர்த்தகச் சபை என்ற மேலோட்டமான பொருள் வரும்.

‘டய்பாய் இன்வெஸ்ட்மென்ட்ஸ்’, தங்களுக்கு முழுமையாகச் சொந்தமான நிறுவனம் என்று தெமாசெக் உறுதிப்படுத்தியது. அதேவேளை, டய்பாய் செயலி, ஜிங் ‌ஷாங் ஹுய் வீசாட் குழு இரண்டுக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் தெமாசெக் குறிப்பிட்டது.

மாற்றப்பட்ட படம், உண்மையில் சென்ற ஆண்டு பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி நடந்த சிங்கப்பூர்-சீனா பொருளியல் பங்காளித்துவ மாநாட்டில் எடுக்கப்பட்டது என்று திருவாட்டி லோ தெரிவித்தார். உண்மையான படம், மாற்றப்பட்ட படம் இரண்டையும் அருகருகே வைத்து அவர் திங்கட்கிழமை ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.

அந்த மாநாட்டில் சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனமும் அனைத்துலக வர்த்தக விளம்பரத்துக்கான சீன மன்றமும் மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.

சமூக ஊடகப் பதிவுகளை சரிபார்த்து விழிப்புடன் இருக்குமாறு கலாசார, சமுதாய, இளையர் மற்றும் வர்த்தக, தொழில் அமைச்சுகளுக்கான மூத்த துணை அமைச்சராகப் பொறுப்பு வகிக்கும் திருவாட்டி லோ கேட்டுக்கொண்டார். அவர், தென்மேற்கு மாவட்ட மேயரரும் ஆவார்.

குறிப்புச் சொற்கள்