தங்கள் தலைமைத்துவம் பற்றிய சர்ச்சை தொடர்பில் இணையத்தில் வதந்திகள் அதிகம் பரவியதைத் தொடர்ந்து பிராப்பர்ட்டிலிம்பிரதர்ஸ் (பிஎல்பி) நிறுவனம் அதன் நிர்வாக விதிமுறைகளை முடுக்கிவிட்டுள்ளது.
அந்த வகையில் சொத்து நிறுவனமான பிஎல்பி, நடத்தைக்கான அதிகாரபூர்வ நடத்தைக் கோட்பாட்டை (code) அறிமுகப்படுத்தவுள்ளது. வேலையிட நடத்தை, வேலையிடத்தில் எத்தகைய ஆடை அணியவேண்டும் போன்றவை குறித்த விதிமுறைகள் அந்தக் கோட்பாட்டில் இடம்பெறக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவறுகளுக்கு அவரவர் பொறுப்பேற்கவேண்டும் என்பதை வலியுறுத்தவும் கூடுதல் பாதுகாப்பான வேலையிடச் சூழலை உருவாக்குவதும் இலக்குகள் என்று பிஎல்பியை நிறுவியவர்களில் ஒருவரான ஏட்ரியன் லிம், கடந்த திங்கட்கிழமை (மார்ச் 9) ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுடன் நடந்த நேர்காணலில் தெரிவித்தார்.
சொத்து முகவர்களும் இதர ஊழியர்களும் தங்களின் அடையாளத்தை வெளியிடாமல் கவலை தரக்கூடிய நிறுவனத்தினுள் இடம்பெறும் விவகாரங்கள் குறித்த ரகசியங்களைத் தெரியப்படுத்தத் தளம் ஒன்றையும் பிஎல்பி வெளியிட்டுள்ளது. பெரிய அளவில் விதிமுறைகள் மீறப்பட்டால் சம்பந்தப்பட்டோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படக்கூடும் என்றும் திரு லிம் குறிப்பிட்டார்.
பிஎல்பியை நிறுவியவர்களில் ஒருவரும் அந்நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாகியுமான மெல்வின் லிம்முக்கும், உத்திப் பிரிவின் முன்னாள் துணைத் தலைவர் கேரேஸ் டானுக்கும் இடையே தகாத உறவு இருந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
திரு மெல்வின் லிம்மும் திருவாட்டி டானும் ஜனவரி 25ஆம் தேதி பிஎல்பியிலிருந்து பதவி விலகினர். அந்நிறுவனத்தின் செயல்பாட்டுப் பிரிவின் முன்னாள் துணைத் தலைவரான மார்க் சான் இப்போது அதன் இடைக்காலத் தலைமை நிர்வாகியாகப் பொறுப்பு வகிக்கிறார்.

