வாகன உரிமைச் சான்றிதழ் (சிஓஇ) கட்டணங்களில் கழிவுகளையும் கூடுதல் கட்டணங்களையும் அறிமுகப்படுத்தும் திட்டத்திற்குப் பொதுமக்களிடம் பெரும்பான்மை ஆதரவு கிடைத்துள்ளது. நடுத்தர, சொகுசு கார்களை வேறுபடுத்தும் ஐந்து அடுக்கு முறைக்கு (five-band system) பெரும்பாலானோர் விருப்பம் தெரிவித்துள்ளனர் என்று போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவ் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 3) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
திங்கட்கிழமை நிறைவடைந்த ஆய்வில் பெறப்பட்ட பரிந்துரைகளை நிலப் போக்குவரத்து ஆணையம் (எல்டிஏ) ஆராய்வதாகக் கூறிய அமைச்சர், இறுதி முடிவுகள் எடுக்கப்படவில்லை என்றார்.
மின்சார கார்களின் வரத்து அதிகரித்ததால் ‘ஏ’, ‘பி’ பிரிவு சிஓஇ கட்டண இடைவெளி குறைந்துள்ளது. மென்பொருள் மூலம் திறனை மாற்றி, ஒரே காரை வெவ்வேறு பிரிவுகளில் சேர்க்க முடிவதால் இந்த ஆண்டில் பலமுறை ‘ஏ’ பிரிவு கட்டணம் ‘பி’ பிரிபிரிவு கட்டணத்தைவிட அதிகமாகப் பதிவானது.
நடுத்தர, சொகுசு கார்களுக்கிடையே நிலையான விலைக் கட்டமைப்பு வேறுபாட்டை மீட்டெடுப்பதே இத்திட்டத்தின் நோக்கம் என்று திரு ஜெஃப்ரி சியாவ் விளக்கினார்.
ஆணையத்தின் பரிந்துரைப்படி, தற்போதைய ‘ஏ’, ‘பி’ பிரிவுகள் கார்களுக்கென ஒரே பிரிவாக ஒன்றிணைக்கப்படும். காரின் திறந்த சந்தை மதிப்பை அடிப்படையாகக் கொண்டு கழிவு, கூடுதல் கட்டண முறை நடைமுறைப்படுத்தப்படும். குறைந்த மதிப்புள்ள கார்களுக்குச் சிஓஇ கட்டணத்தில் கழிவும், அதிக மதிப்புள்ள கார்களுக்குக் கூடுதல் கட்டணமும் விதிக்கப்படும்.
இரண்டு தேர்வுமுறைகளிலும் அதிகபட்சக் கழிவும் கூடுதல் கட்டணமும் தலா $15,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், அவற்றுக்கு இடையிலான அதிகபட்ச வேறுபாடு $30,000 வரை இருக்கக்கூடும்.
சந்தை சக்திகளே சிஓஇ விலையைத் தீர்மானிக்கும் அதே வேளையில், எளிய மக்கள் வாங்கும் கார்களுக்கும் சொகுசு கார்களுக்கும் இடையே தெளிவான வேறுபாட்டை உருவாக்குவதே இதன் நோக்கம். இந்த மறுஆய்வு நடப்பாண்டிற்குள் நிறைவடைந்து, அதன் விவரங்கள் 2027ஆம் ஆண்டின் முதல் பாதியில் வெளியிடப்படும் என்று ஆணையம் தெரிவித்தது.
