தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (என்டியுசி) 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக அதன் விதிமுறைக் கட்டமைப்பில் மாற்றம் செய்துள்ளது.
அதனைத் தொடர்ந்து மூன்று இணையவழி வேலைச் சங்கங்கள் (பிடபிள்யூஏ), முழுமையாக என்டியுசியில் சேர்கின்றன. இதன் மூலம் ஊழியரணித் தலைமைத்துவத்தில், தங்களுக்கான வாதங்களை முன்வைக்க அக்குழுக்களுக்கு உரிமை கிடைத்துள்ளது.
இந்த மாற்றத்துக்குச் சாதகமாக 90 விழுக்காட்டுக்கும் அதிகமான என்டியுசி ஊழியரணியினர் வெள்ளிக்கிழமை (நவம்பர் 14) வாக்களித்ததைத் தொடர்ந்து அதன் விதிமுறைக் கட்டமைப்பில் மாற்றங்களைக் கொண்டுவர ஒப்புதல் கிடைத்தது.
தேசிய விநியோக ஆர்வலர்கள் சங்கம், தேசிய தனியார் வாடகை வாகனச் சங்கம், தேசிய டாக்சி சங்கம் ஆகியவை சம்பந்தப்பட்ட மூன்று சங்கங்களாகும். மாற்றத்தையடுத்து இச்சங்கங்கள், என்டியுசியின் முழு உறுப்பு அமைப்புகளாக அங்கீகாரம் பெறுகின்றன. தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான முழு வாக்குரிமையையும் இவை பெறுகின்றன.
இந்த மூன்று குழுக்களை முழுமையாக உள்ளடக்குவதன் மூலம் என்டியுசி, மேலும் அனைவரையும் உள்ளடக்கும் ஊழியரணியாக உருவெடுக்கிறது என்றும் என்டியுசியால் இணையவழி ஊழியர்களை மேலும் நன்கு பிரதிநிதிக்க முடியும் என்றும் அதன் தலைவர் கே. தனலட்சுமி கூறினார். எல்லா வகையான ஊழியர்களும் முக்கியம் என்ற என்டியுசியின் கோட்பாட்டை வடிவமைப்பதில் இணையவழி ஊழியர்களுக்குப் பங்கிருப்பதை இந்நடவடிக்கை உறுதிசெய்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரின் ஊழியரணிக் கட்டமைப்பில் காணப்படும் மாற்றங்களுக்கேற்பவும் இணையவழி வேலை அதிகமாக இருந்து வருவதினாலும் தங்களின் விதிமுறைக் கட்டமைப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக என்டியுசி வெள்ளிக்கிழமை அறிக்கையில் தெரிவித்தது.
கடந்த ஜனவரி மாதம் இணையவழி ஊழியர் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதையடுத்து என்டியுசி விதிமுறைக் கட்டமைப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அச்சட்டத்தைக் கொண்டுவருமாறு 10 ஆண்டுகளுக்கும் மேலாகத் தாங்கள் குரல் கொடுத்து வந்ததாக என்டியுசி தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
இணையவழி ஊழியர் சட்டத்தின்கீழ், பணிக்காலக் காய இழப்பீட்டுச் சட்டம் இணையவழி ஊழியர்களுக்கும் நீட்டிக்கப்படுகிறது. அதன்படி வீடு வாங்கவும் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு போதுமான ஆதரவு பெறவும் இணையவழி ஊழியர்கள் மத்திய சேமநிதியிலிருந்து குறிப்பிட்ட தொகை பெற முடியும்.
மேலும், என்டியுசியில் முழுமையாக சேர்க்கப்பட்டுள்ள மூன்று சங்கங்களும் இணையவழி ஊழியர்களை அதிகாரபூர்வமாகப் பிரதிநிதிக்கும்.

