கடந்த நவம்பர் மாதம் 20ஆம் தேதியன்று ‘ரெட்டிக்கியூலேட்டட் பைத்தன்’ (reticulated python) வகை மலைப்பாம்பு ஒன்று உயிருடன் எரிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
தேசிய பூங்காக் கழகம் இந்த விவகாரத்தை ஆராய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏக்கர்ஸ் எனப்படும் விலங்கு நல ஆய்வு, கல்வி அமைப்பு நவம்பர் 26ஆம் தேதியன்று இணையத்தில் பதிவேற்றம் செய்த காணொளியில் தீப்பிடிக்கக்கூடிய தெளிப்பான்களைக் கொண்டு இருவர் மலைப்பாம்பை எரிப்பது தெரிந்தது. அவர்களில் ஒருவர் துடித்துக்கொண்டிருந்த அப்பாம்பை மிதித்ததும் தெரிந்தது. அந்த மலைப்பாம்பு பின்னர் கொள்கலன் ஒன்றில் வைக்கப்பட்டு எறியப்பட்டது.
இச்செயல், தான் சந்தித்திருக்கும் ஆக மோசமான விலங்குவதைச் சம்பவங்களில் ஒன்று என ஏக்கர்ஸ் குறிப்பிட்டது. வனவிலங்குச் சட்டத்தின்கீழ் தேசிய பூங்காக் கழகத் தலைமை இயக்குநரின் அனுமதியின்றி வனவிலங்குகளைப் பிடிப்பதோ கொல்வதோ குற்றமாகும்.
குற்றவாளிகளுக்கு 50,000 வெள்ளி வரையிலான அபராதம் அல்லது ஈராண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். பாதுகாக்கப்பட்டுவரும் வனவிலங்குகளுக்கு இது பொருந்தும்.
காணொளியில் காணப்பட்ட மலைப்பாம்பு, இயந்திரம் ஒன்றில் சிக்கியிருந்ததுபோல் தெரிந்ததென ஏக்கர்ஸ் துணை தலைமை நிர்வாகி அன்பரசி பூபால் தெரிவித்தார். அப்பாம்பு, மூன்று முறை பல வினாடிகளுக்கு எரிக்கப்பட்டதாகவும் அவர் சொன்னார். சுமார் இரண்டு மீட்டர் நீளம்கொண்ட அந்த மலைப்பாம்பு, யாருக்கும் ஆபத்து விளைவிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதுவே தான் கண்டிருக்கும் ஆக மோசமானச் செயல் என்று அவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார். அதிர்ச்சி தரும் இச்செயல் அதிக எரிச்சல் மூட்டும் ஒன்று என்றும் திருவாட்டி அன்பரசி கூறினார்.
“நமது பாம்புகள், உடும்புகள் தொடர்ந்து இதுபோன்ற செயல்களுக்கு உள்ளாகின்றன. நம்மில் சிலர் விலங்குகளை வேறு கண்ணோட்டத்துடன் பார்க்கலாம், சில விலங்குகளிடம் மற்றவற்றைவிட கூடுதல் அக்கறை காட்டலாம். ஆனால், வலியும் வேதனையும் உலகளவில் அனைவருக்கும் ஒன்றே,” என்றார் திருவாட்டி அன்பரசி. பாதிக்கப்பட்ட மலைப்பாம்பு தனக்கு ஏற்பட்ட காயங்களாலும் இழைக்கப்பட்ட மனவுளைச்சலாலும் உயிர் பிழைப்பதற்கு அதிக வாய்ப்பு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.